தல தோனி ஐபிஎல் 2024-க்கு ரெடியாகும் வீடியோ வைரல்
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாட இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் தற்போது 42 வயது எட்டியுள்ள சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீனாக இருக்கும்.
ஏனெனில் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதால் நிச்சயம் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்து விடுவார் என்பதனால் இந்த ஆண்டு சென்னை அணி வெற்றியுடன் தோனியை வழி அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே வேளையில் தோனியும் ரசிகர்களின் அன்புக்காகவும். பாசத்திற்காகவும் தான் இந்த ஆண்டு விளையாடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஐபிஎல் தொடர் முடிந்து முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்ட தோனி கடந்து சில மாதங்களாக ஓய்வில் இருந்த வேளையில் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற பேடை கட்டிக்கொண்டு நீல நிற ஹெல்மெட்டை அணிந்து தோனி பிராக்டீஸ் செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் தோனி விரைவில் பயிற்சி தொடங்குவார் என்றும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெறும் என்று கூறியிருந்த வேளையில் தற்போது தோனி தனது பேட்டிங் பயிற்சி ஆரம்பித்துள்ளார்.
இப்படி ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே தோனி பயிற்சியை ஆரம்பித்துள்ளது இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
அதோடு தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதனால் நிச்சயம் இம்முறை முன்கூட்டியே பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட வேண்டும் என்றும் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.