நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த ‘கார்போஹைட்ரேட்’ உணவுகள் இவை தான்!
முழு தானிய பாஸ்தா: இது கார்போஹைட்ரேட்டின் சிறந்த மூலமாகும், ஏனெனில் இது வெள்ளை பாஸ்தாவைப் போலல்லாமல் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் தானிய அடிப்படையிலான மாவுச்சத்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது, பார்லி, குயினோவா, முழு தானியங்களால் ஆன பாஸ்தா, முழு கோதுமை பாஸ்தா மற்றும் பழுப்பு அரிசி போன்ற சத்தான தானியங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
முழு தானிய ரொட்டியில் ஆரோக்கியமான நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே, வெள்ளை பிரெட்டிற்கு பதிலாக, நீங்கள் காலை உணவாக முழு தானிய ரொட்டியை சாப்பிடலாம்.
கிட்னி பீன்ஸ் (ராஜ்மா) போன்ற பீன்ஸ் வகைகளில் மற்ற பல தாவர ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும்.
பாதாம், வாதுமை பருப்புகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அவை கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக அதிக கலோரிகளைக் கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவற்றை மிதமாக உட்கொள்ள வேண்டும். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் நான்கு கிராம் கார்போஹைட்ரேட்டும், ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 5.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், ஒரு அவுன்ஸ் பிஸ்தாவில் நான்கு கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது.
பழங்களில் வைட்டமின்கள், நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. எனவே பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் எந்தெந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்பதை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் தீர்மானிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)