கனமழையால் ஏற்பட்ட பேரழிவு.. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் -முதல்வர் அதிரடி

Mon, 02 Dec 2024-7:58 pm,

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ​​புதுச்சேரியில் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 9 மணி வரை 24 மணி நேரத்தில் 48.4 செ.மீ., அசாதாரண மழை பெய்துள்ளது என்றும், இது ​​புதுச்சேரி வரலாற்றில் எப்போதும் பெய்யாத மழை என்று கூறினார்.

208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 85,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்தார்.

சூறாவளி மற்றும் மழையினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி உறுதி அளித்தார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3.54 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.5,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.

10,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அதில் பால் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்யும் விதமாக உயிரிழந்த பசு ஒன்றுக்கு ரூ.40,000 மற்றும் கன்றுக்கு ரூ.20,000, படகுகளை இழந்த மீனவர்களுக்கு 10,000 ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 20,000 ரூபாயும், பகுதி சேதத்திற்கு 10,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி அறிவித்தார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ரூ.100 கோடி உதவி கேட்டு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பரவலான சேதத்தை மதிப்பிடுவதற்கு மதிப்பீட்டுக் குழுவை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள், படகுகளைப் பயன்படுத்தி, நீரில் மூழ்கிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை என யூனியன் பிரதேச கல்வி அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link