Public Exam Date | விரைவில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை.. மாணவர்களே கவனம்!
10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ட்வீட் போட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்.
வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன்பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும்.
கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அளிக்கப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் முடிந்து, கடந்த 7 ஆம் தேதி (அக்டோபர், திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி வேலை நாட்கள் குறைத்து திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.