வெயிலில் அலைந்து குளிச்சதும் இதை செய்யவே செய்யாதீங்க... தோல் மருத்துவரின் அட்வைஸ்
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்து. மேலும், இந்த வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்து.
வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து கோவையை சேர்ந்த தோல் சிகிச்சை மருத்துவர் கனிகா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
தோல் மருத்துவர் கனிகா கூறுகையில்,"கோவையில் 20 வருடங்களுக்கு பிறகு தற்போது 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வெப்ப அலையால் உடலில் நீர் வற்றிப்போவதை தடுக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.
"ஆன்ட்டி ஆக்சைடு மற்றும் சிட்ரஸ் அதிகம் இருக்கும் பழங்கள் போன்ற பல உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து இளநீர் போன்ற இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், "வெளியே வரும்போது தோலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஸ்கின் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வெளியில் அதிகமாக சுற்றுபவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சன் கிரீம்களை பயன்படுத்தலாம்" என்றார்.
வெயில் காலத்தில் அணிந்துகொள்ளும் உடை குறித்து பேசிய அவர்,"முடிந்தவரை முழு கை சட்டை அணிந்து கொள்வது கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பை கொடுக்கும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்த்து காட்டன் உடைகளை அணியலாம்" என்றார்.
அதுமட்டுமின்றி, "கடும் வெப்பத்தால் வேர்க்குரு மற்றும் படர்தாமரை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் போது தயங்காமல் உடனடியாக தோல் மருத்துவரை அணுக வேண்டும். சரியான சோப்பு மற்றும் ஷாம்புவை பயன்படுத்தி இரண்டு வேளை குளிப்பது உடல் வெப்பத்தை தணிக்கும். குளித்ததற்கு பிறகு தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பது தவிர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் வியர்வை சேரும் போது தோலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.