ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைக்க தோனிதான் காரணமா? - சுவப்னில் சொல்லும் சீக்ரெட்

Thu, 01 Aug 2024-4:07 pm,

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் தொடர் வரும் ஆக. 11ஆம் தேதி வரை நடைபெறும்.

 

இதில், இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், இன்று மீண்டும் துப்பாக்கிச்சுடுதலிலேயே மூன்றாவது பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இம்முறையும் வெண்கலம்தான். முன்னதாக, மனு பாக்கர் துப்பாக்கிச்சுடுதல் மகளிர் பிரிவிலும் (10 மீட்டர் ரைஃப்பிள்), மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் (10 மீட்டர் ரைஃப்பிள்) வெண்கலம் வென்றிருந்தனர். 

 

துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் 50 மீட்டர் த்ரீ போஷிஷன் பிரிவின் இறுதிப்போட்டியில் சுவப்னில் குசலே (Swapnil Kusale) மூன்றாவது இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இறுதிப்போட்டியில் மொத்தம் 451.4 புள்ளிகளை பெற்றிருந்தார். 

 

1995ஆம் ஆண்டு ஆக. 6ஆம் தேதி பிறந்த சுவப்னில் குசலேவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் தொடராகும். எகிப்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் 50மீட்டர் ரைஃப்பிள் 3 பொஷிஷன் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்ததன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றிருந்தார். 

 

2023ஆம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு தொடரில் 50மீட்டர் ரைஃப்பிள் 3 பொஷிஷன் பிரிவில்  சுவப்னில் இடம்பெற்றிருந்த இந்திய அணியே தங்கபப் பதக்கத்தை கைப்பற்றியது. அதேபோல், 2023இல் நடந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். 

 

மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்து விளையாட்டில் ஆர்வங்கொண்டவராக இருந்தாலும், இவர் இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். 29 வயதான சுவப்னில் 2012ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். 12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். 

 

இவரின் இந்த வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் (MS Dhoni) இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம், இதையும் அவரேதான் கூறியிருக்கிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை (MS Dhoni - An Untold Story) பல முறை பார்த்ததாகவும், அவரின் வாழ்க்கை பயணம் தன்னையும் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேட்கையை நோக்கி நகர்த்தியதாகவும் கூறியுள்ளார். 

 

ஒலிம்பிக் தொடரில் நேற்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற உடன் சுவப்னில் குசலே அளித்த பேட்டி ஒன்றில், "நான் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் பெரிதாக ஒருவரையும் பின்பற்றுவதில்லை. அதற்கு வெளியே பார்த்தால், ஒரு தனிப்பட்ட மனிதராக தோனியை பார்த்து நான் மிகவும் வியக்கிறேன். நான் விளையாடும் துப்பாக்கிச்சுடுதலில் அமைதியும், பொறுமையும் மிக மிக அவசியம். அவர் களத்தில் எப்படி அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பாரோ அப்படி நான் இருக்க வேண்டும் என நினைப்பேன். அவருடைய கதையும் என்னுடையதும் ஒன்றுதான். நானும் அவரை போல் டிக்கெட் பரிசோதகராக இருந்திருக்கிறேன்" என்றார்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link