தீபாவளிக்கு கண்டிப்பாக செய்ய வேண்டிய 3 பூஜைகள்... மறக்காமல் செய்தால் ஐஸ்வர்யம் அதிகரிக்கும்

Mon, 28 Oct 2024-1:38 pm,

தீபாவளி என்றாலே கொண்டாட்டத்தின் பண்டிகைதான். புத்தாடை, இனிப்பு, பலகாரம், பட்டாசு என அனைவரின் வீடுகளும் கொண்டாட்டத்தால் நிரம்பியிருக்கும். 

 

கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, தீபாவளி அன்று வீட்டில் சில பூஜைகள் செய்வதும் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், ஐஸ்வர்யத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. 

 

தீபாவளி அன்று வீட்டில் பூஜை செய்யப்படும் என்றாலும் குறிப்பாக இந்த 3 பூஜைகளை (Diwali Pujas) செய்வது முக்கிய சடங்காக நம்பப்படுகிறது. 

 

கங்கா ஸ்நானம், லட்சுமி பூஜை, குபேர பூஜை, நாணய வழிபாடு ஆகியவற்றை தீபாவளி அன்று செய்ய வேண்டும். இந்த பூஜைகளை எப்படி செய்ய வேண்டும். இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 

 

கங்கா ஸ்நானம்: தீபாவளி அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும். அன்று காலை தலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். நல்லெண்ணெயில் லட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால்தான் இதற்கு பெயர் கங்கா ஸ்நானம் ஆகும். கங்கா ஸ்நானம் முடித்த பின்னரே புத்தாடைகளுக்கு மஞ்சள் வைத்து அணிய வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

நாணய வழிபாடு: குபேர பகவானுக்கு உகந்த எண் 5 ஆகும். அந்த வகையில், ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு குபேர பூஜை செய்வது வழக்கம். 108 நாணயங்களை தட்டில் வைத்து, அதனை கைகளால் எடுத்து மீண்டும் தட்டிலேயே போட வேண்டும். குபேர பகவானின் 108 போற்றிகளை சொல்லிக்கொண்டே இந்த அர்ச்சனையை செய்வது உகந்தது. பூஜை செய்த பின் பால், சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் படைத்து தீபாராதனை காட்டி பூஜிக்க வேண்டும். 

 

லட்சுமி, குபேர பூஜை: கடன் தொல்லையை போக்க தீபாவளி அன்று லட்சுமி, குபேர பூஜை செய்வது சிறந்தது. வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி, குபேர பகவானின் திருவுருவப் படங்களை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். குபேர இயந்திரத்தில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை அதன் முன்பு தலைவாழை இலையில் வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, குங்குமம் இட்டு இலையின் வலதுபக்கம் வைக்கவும். விநாயகரை வழிபட்ட பிறகு, குபேர லட்சுமியின் துதிப் பாடி கற்பூர தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். துதி அறியாத பக்தர்கள் 'குபேராய நமஹ, தனபதியே நமஹ' என்று துதித்து கலசத்தின் மீது பூக்களை தூவி வழிபடலாம். 

 

காய்ச்சிய பசும்பால், வாழைப்பழம், பாயசம் ஆகியவற்றை நைவேத்யம் செய்வது உகந்தது. பூஜைக்கு வைத்த பணம் மற்றும் நாணயங்களை ஏழைகளுக்கு தானம் செய்வது நன்று. தீபாவளியன்று செய்யும் இந்த சடங்குகளால் வீட்டில் சங்கடங்கள் நீங்கி, செல்வம் பெருகி, வாழ்வில் இருள் நீங்கி, புதிய ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link