தீபாவளி நெருங்குது... இனிப்புகளை சாப்பிடும் முன் இந்த விஷயங்களை ஞாபகம் வச்சுக்கோங்க
பண்டிகைகள் என்றாலே இனிப்புகள்தான் நம் நியாபகத்திற்கு வரும். அதுவும் இன்னும் சில நாள்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி பண்டிகைகள் வர உள்ளன. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகையும் வருகிறது. பண்டிகைகளில் அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை நாம் அதிகம் உண்போம்.
இனிப்புகளில் பெரும்பாலும் வெற்று கலோரிகள் தான் இருக்கும். அதாவது, அவை அதிக கலோரி உணவுகள் என்றாலும் அதில் எவ்வித புரதமோ, நுண்ணிய ஊட்டச்சத்துகளோ, ஃபைபரோ எதுவும் இருக்காது. சர்க்கரை மற்றும் கொழுப்பு மட்டுமே இருக்கும். எனவே, இனிப்புகளை உண்ணும்போது இந்த விஷயங்களை நினைவில்வைத்துக்கொள்வது நல்லது.
இனிப்புகளை சாப்பிட்ட பின்னரே உண்ண வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அதேபோல், லட்டு, அல்வா போன்று நட்ஸ் மற்றும் நெய் ஊற்றி தயாரிக்கப்பட்ட இனிப்புகளை சாப்பிடுங்கள். சாக்லேட், பிரௌனி போன்றவற்றை தவிர்க்கவும். அவற்றில் வெற்று கலோரிகள் தான் அதிகம்.
இனிப்புகளை பெரும்பாலும் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளவும். சமமான ஊட்டச்சத்துகளை வழங்கும் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் நீங்கள் இனிப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, இனிப்பை சாப்பிடும் முன் சரியான அளவில் ஃபைபர் மற்றும் புரதம் ஆகிய சத்துகள் அடங்கிய உணவுகளை நீங்களை சாப்பிட்டிருந்தால், உங்களின் ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
வெறும் வயிற்றில் நீங்கள் இனிப்புகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயரும். இதனால், உங்கள் உடல் மந்தநிலையை அடையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேநேரத்தில், குறைந்த அளவு இனிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல், தேன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட இயற்கையான சுவையூட்டிகளால் செய்யப்பட்ட இனிப்புகளையும், நட்ஸ் கலந்த இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
இனிப்புகளை சாப்பிடுவதால் நெஞ்சரிச்சல் உள்ளிட்ட அசிடிட்டி பிரச்னைகள் வராமல் தவிர்க்க, சாப்பாட்டுக்கு 15-20 நிமிடங்கள் முன் சப்ஜா விதைகள் கலந்த தண்ணீரை அருந்தலாம். பண்டிகை காலம் என்றாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இவை நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு கிடையாது. மேலும் மேற்குறிப்பிட்ட தகவல்களை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.