இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமன் வரை... முளை கட்டிய தானியங்களை மிஸ் பண்ணாதீங்க
முளைகட்டிய தானியங்களில் அதிக ஊட்டச்சத்து: தானியங்களில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. முளை கட்டிய பிறகு அவற்றில் உள்ள இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி அளவு அதிகரிக்கிறது. எனவே, இவற்றை சாப்பிடுவதன் மூலம் அதிக அளவு ஊட்டசத்தினை பெறலாம்.
இரத்த சர்க்கரை அளவு: முளைகட்டிய தானியங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டது. மேலும், அதிக நார்ச்சத்து உள்ளதன் காரணமாக, முளை கட்டிய தானியங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.
உடல் பருமன்: முளை கட்டிய தானியங்களில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இதனால், குறைவாக சாப்பிட்டு, நிறைவாக உணர்வதால், உடல் எடை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இதய ஆரோக்கியம்: முளை கட்டிய தானியங்கள் கெட்ட கொழுப்பை எரிப்பதுடன், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்: முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், செரிமான பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. செரிமான நொதிகளின் சுரப்பு அதிகரிப்பதால், வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். இதனால் செரிமானம் எளிதாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி: முளைத் கட்டிய தானியங்களில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். நோய்களைத் தவிர்க்கவும், சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
தானியங்களை முளை கட்டும் முறை: தானியங்களை முதலில் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் வடிகட்டி, ஈரப்பதத்துடன், இருட்டான இடத்தில் வைக்கவும். தானியங்களை பொறுத்து அவை ஒன்று அல்லது இரண்டும் நாட்களில் அவற்றில் இருந்து முளைகள் வெளிப்படும். நீங்கள் அவற்றை சாலட் வடிவிலோ அல்லது சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.