EPF Withdrawal: விரைவில் புதிய விதிகள், நொடிகளில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்..... வரம்பு என்ன தெரியுமா?
இபிஎஃப் உறுப்பினர்களுக்கான கணக்கு அணுகல், நடைமுறைகள், பணம் எடுக்கும் செயல்முறைகள் என இவை அனைத்தையும் மேம்படுத்தும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, சில முக்கிய மேம்பாடுகளை செய்து வருகிறது. வருங்காலத்தில் அதன் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை EPFO பரிசீலித்து வருகிறது.
கூடிய விரைவில், அவசர காலங்களில் ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். இருப்பினும், இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள மொத்த தொகையில் எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் என்பதற்கு சில வரம்புகள் விதிக்கப்படலாம். இந்த வரம்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தொழிலாளர் அமைச்சகம், உறுப்பினர்கள் சுய ஒப்புதல் செயல்முறை மூலம் சிறப்பு ஏடிஎம்கள் மூலம் நேரடியாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் வகையில் விதிகளை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பகுதியளவு பணத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட வேண்டும். மாற்றத்தை எளிதாக்குவதற்காக அமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
பணியிலிருக்கும்போதே ஊழியர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. இல்லை, வேலையில் இருக்கும்போது பணியாளர்களால் தங்கள் சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. ஆனால் தனிப்பட்ட அவசரநிலைகளுக்கு விலக்குகள் உள்ளன. இருப்பினும், தற்போதுள்ள மாற்றங்களின்படி, அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் ஒரு உறுப்பினர் தனது அவசரகால தேவைக்கு பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கையை சுயமாக அங்கீகரிக்க முடியும்.
ஐடி அமைப்பில் வரவிருக்கும் மாற்றங்கள் நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கி நிறுவனங்களின் பரிந்துரைகளுக்கு இணங்க இருக்கும். அவசர காலங்களில் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆவணங்களின் தேவைகள் எதுவும் இல்லாமல் உதவுவதற்காக EPFO ஏராளமான பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
பகுதியளவு இபிஎஃப் தொகையை (EPF Amount) பெறுவதற்கான நிபந்தனைகளில் திருமணம், மருத்துவச் செலவுகள், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல், கல்வித் தேவைகள் மற்றும் வீட்டைப் புதுப்பித்தல் அல்லது கட்டுதல் ஆகியவை அடங்கும். மேலும், ஒரு உறுப்பினர் தான் கடைசியாக பணிபுரிந்த வேலைக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் முழு நிதியையும் திரும்பப் பெறலாம்.
முழு செயல்முறையும் பாரம்பரிய வங்கி செயல்முறையை போல இருக்கும். உறுப்பினர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி போர்டல் அல்லது செயலி வழியாக லாக் இன் செய்யலம். இது அவர்களது தொகை வங்கிக் கணக்குகளுக்கு உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுவதை எளிதாக்கும்.
உறுப்பினர்கள் டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் அவற்றை அணுகி எடுக்கலாம். இதன் மூலம் EPFO ஒரு வங்கியைப் போல செயல்படுவது உறுதி செய்யப்படுகின்றது.
இந்த திட்டத்தை செயல்படுத்த, EPFO அனைத்து முக்கிய வங்கிகளையும் UAN உடன் இணைக்கும். இதன் மூலம் ATM -கள் மூலம் நிதி பரிமாற்ற செயல்முறை மிகவும் எளிதாக்கப்படும். சிறந்த மேம்பாடுகளை உறுதி செய்வதற்காக, முக்கிய நிதி நிறுவனங்களின் கருத்துக்களை இணைத்து, ஜூன் மாதத்திற்குள் ஐடி சிஸ்டம் 3.0 ஐ செயல்படுத்த தொழிலாளர் அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது.