PF உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... இனி இதை செய்ய வேண்டாம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. இதன் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித செயல்முறைகளிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது.
முன்னர் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வேலையை மாற்றும்போது, பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு அவர்களே மாற்ற வேண்டிய நிலை இருந்தது. இதில் அவர்கள் பல வித நடைமுறை சிக்கலக்ளை எதிர்கொண்டனர்.
தற்போது ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்றும்போது இபிஎஃப் கணக்குகள் தானாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
Automatic Transfer Process என்றால் என்ன? தானியங்கு பரிமாற்ற அம்சமானது, தற்போதுள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members), தங்கள் வேலைகளை மாற்றும்போது, எந்த வித ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறைகளும் இல்லாமல், தங்களது பிஎஃப் இருப்புத் தொகையை (PF Balance) பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு தடையின்றி மாற்றுவதற்கு உதவுகிறது. அதாவது, இனி இபிஎஃப் கணக்கு பரிமாற்றம் (EPF Account Transfer) தானாகவே நடக்கும்.
இந்த புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், பழைய மற்றும் புதிய EPF கணக்குகள் EPFO ஆல் பராமரிக்கப்படுகின்ற EPF உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகள் (PF Trusts) இந்த தானியங்கி பரிமாற்ற திட்டத்தின் கீழ் வராது.
முன்னர் பிஎஃப் தொகையை மாற்ற ஒரு சிறப்பு வகை படிவம் 31 -ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, சில நாட்களில் புதிய நிறுவனத்திற்குத் தொகை மாற்றப்படும். எனினும், தற்போது புதிய அமைப்பு வந்த பிறகு இந்த நடைமுறைகள் எதுவும் தேவை இருக்காது. தொகை தானாகவே மாற்றப்பட்டு விடும்.
EPFO இன் இந்த சமீபத்திய மாற்றத்தின் மூலம், பணியாளர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுகும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும், ஓய்வூதியப் பயணத்தை இது பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது.
சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது. பிஎஃப் தொகை பணி ஓய்விற்கு பிறகான காலத்தில் உதவும் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது.