ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த நிவாரணம்: புதிய ஓய்வூதிய முறை... இனி `அந்த` கவலை இல்லை
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினர்களாக உள்ள சுமார் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது. ஓய்வுதியம் பெறும் செயல்முறை மிக எளிதாக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.
EPFO ஆல் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அமலுக்கு வந்துள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் நாட்டின் எந்த வங்கியின் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் வரும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய மோடி அரசு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த வங்கியின் எந்த கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தை எளிதாகப் பெற முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவுக்கு செப்டம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “சென்ட்ரலைஸ்டு பென்ஷன் பேமென்ட் சிஸ்டத்தின் (சிபிபிஎஸ்) சோதனை ஓட்டத்தின் கீழ், ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் கர்னால் பகுதிகளைச் சேர்ந்த 49000க்கும் மேற்பட்ட இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் சுமார் ரூ.11 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது." என கூறினார்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், ஓய்வூதியதாரர் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றாலும், அல்லது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும், PPO எனப்படும் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (Pension Payment Order) மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கிக் கிளையிலிருந்தும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அதாவது CPPS என்பது ஓய்வூதியம் பெறுவோர் இந்தியாவில் எங்கும் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் ஒரு வசதி. இதில், ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது வங்கிக்கு செலுத்த வேண்டியதில்லை. பணி ஓய்விற்கு பிறகு தங்கள் சொந்த ஊருக்கு அல்லது சொந்த கிராமத்திற்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரிதும் உதவும்.
இதுவரை நடைமுறையில் உள்ள ஓய்வூதிய விநியோக முறையில் EPFO இன் ஒவ்வொரு பிராந்திய அலுவலகமும் 3 அல்லது 4 வங்கிகளுடன் மட்டுமே ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தது. அங்கிருந்து மட்டும்தான் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
ஓய்வூதியதாரர்கள் வசிக்கும் நகரத்தை மாற்றும்போது, அதே வங்கியின் மற்றொரு கிளையில் இருந்து ஓய்வூதியம் பெற PPO-ஐ மாற்ற வேண்டியிருந்தது. இப்போது இந்த அனைத்து தொந்தரவுகளிலிருந்தும் நிவாரணம் கிடைத்துள்ளது.
இது அரசு சார்பில் புத்தாண்டில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகின்றது. இதனுடன் இனி ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத் தொகையைப் பெறுவதில் எந்த சிக்கலையும் சந்திக்காத நிலை உருவாகும்.
அரசின் இந்த நடவடிக்கையானது EPF உறுப்பினர்களுக்கு பல வசதிகளை வழங்குவதோடு, அவர்களது நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தெகமில்லை.