EPFO... PF பங்களிப்பு முதல்.. க்ளைம் வரை... 2025 புத்தாண்டில் அமலாகும் புதிய விதிகள்...
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது EPFO இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது. சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளத்தில் 24% மாதாமாதம் பிஎஃப் கணக்கில் போடப்படுகிறது. இதற்காக, 12% ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 12% நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது.
பணியாளரின் பங்களிப்பு வரம்பு மாறலாம்: அடுத்த ஆண்டு வரவிருக்கும் மற்றொரு பெரிய மாற்றம் ஊழியர்களுக்கான EPF பங்களிப்பு வரம்பில் மாற்றம் ஆகும். தற்போது, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் செலுத்துகின்றனர். இருப்பினும், அதிக அளவில் பங்களிக்க அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஈக்விட்டியில் முதலீடு செய்யும் வசதி: ஈபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களை ஈக்விட்டியில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்கும். ஓய்வூதிய நிதி அமைப்பு நேரடி பங்கு முதலீட்டை அனுமதித்தால், உறுப்பினர்கள் அதிக வருமானத்தை பெறலாம்.
ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி: EPFO சந்தாதாரர்களுக்கு 24/7 பணம் எடுக்கும் வசதியை வழங்கும் ஏடிஎம் கார்டை வழங்க EPFO முடிவு செய்துள்ளது. இந்த ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி 2025-26 நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அவர்களது வங்கிக் கணக்கில் பிஎஃப் பணத்தைப் பெற சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதன் மூலம், சந்தாதாரர்கள் 24 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திலும் எளிதாக பணத்தை எடுக்க முடியும்.
ஓய்வூதியத்திற்கான விதிகள்: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் எந்த கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கை எதுவும் இல்லாமல் நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெறலாம். இந்த நடவடிக்கையானது உறுப்பினர்களுக்கு பெரும் வசதியை வழங்குவதோடு, அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
EPFO அதன் IT உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்பும் பயனாளிகள், பிஎஃப் கிளைமில் தங்கள் பணத்தை எளிதாக திரும்பப் பெற அனுமதிக்கும். ஜூன் 2025க்குள் இதற்கான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டவுடன், உறுப்பினர்களின் பிஎஃப் க்ளைம் கோரிக்கைகள் முன்பை விட வேகமாக தீர்க்கப்படும். தவிர, இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் உள்ளிட்ட EPFO திட்டங்களின் பலன்களைப் பெற UAN எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இப்போது UAN எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி 2025 ஜனவரி மாதம் 15ம் தேதி ஆகும். முன்னதாக இந்த காலக்கெடு 2024 நவம்பர் 30ம் தேதியாக இருந்தது.