EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பல முக்கிய விதிகளில் மாற்றம், சுலபமாகும் செயல்முறை
பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது உறுப்பினர்களின் வசதி மற்றும் நன்மைக்காக பல வித மாற்றங்களை செய்கிறது. இவற்றை பற்றி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.
இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அனைவரும் பிஎஃப் கணக்கு (PF Account) விதிகளில் EPFO செய்த சமீபத்திய மாற்றங்களை அறிந்து கொள்வதும், புரிந்துகொள்வதும் அவசியமாகும். இந்த மாற்றங்களில் தானியங்கு தீர்வு (Auto Settlement), பல இடங்களுக்கான க்ளெய்ம் தீர்வு (Multi Location Claim Settlement) மற்றும் இறப்புக்கான க்ளெய்ம்களின் விரைவான தீர்வு (Death Claim) ஆகியவை அடங்கும்.
ஊடக அறிக்கைகளின் படி, EPFO ஆல் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் அதிக எண்ணிக்கையிலான PF உறுப்பினர்களுக்கு வசதியை வழங்கும். EPFO ஆல் செய்யப்பட்ட இந்த மாற்றங்களை பற்றி இங்கே புரிந்துகொள்ளலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விதி 68B இன் கீழ் வீட்டுவசதி மற்றும் 68K விதியின் கீழ் கல்வி மற்றும் திருமணத்திற்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இப்போது 1,00,000 ரூபாய் வரையிலான எந்தவொரு கோரிக்கையும் மனித தலையீடு இல்லாமல் தானாகவே செயல்படுத்தப்படும். அதாவது இந்த பணிகளுக்காக உறுப்பினர்கள் இனி அதிகம் அலையத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் EPF க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறையை விரைவுபடுத்த, EPFO பல இடங்களில் தீர்வுக்கான இணைப்பு அலுவலக அமைப்பைத் தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள க்ளெய்ம் தீர்வுகளை விரைவுபடுத்துவதோடு இது தொடர்புடைய பணிகளின் நேரத்தையும் சுமையையும் குறைக்க உதவும். மேலும், இந்த வசதி க்ளெய்ம் செயல்முறையை விரைவுபடுத்தும்.
ஆதார் தகவல் இல்லாத நிலையில் இறப்பு க்ளெய்ம் செயலாக்கத்தை எளிதாக்க, EPFO ஆதார் சீடிங் இல்லாமல் பிசிக்கல் க்ளெய்ம்களை அனுமதித்துள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகக் கொண்டு வரப்பட்டாலும், இதற்கு OIC-யிடம் இருந்து முறையான ஒப்புதல் தேவை. இறந்தவருடன் உரிமை கோருபவர்களுடனான உறவை உறுதிப்படுத்த, சரிபார்ப்பு விவரங்களை இது உள்ளிடும். இருப்பினும், UAN இல் இறந்த உறுப்பினரின் விவரங்கள் சரியாக இருந்தாலும் ஆதார் தரவுத்தளத்தில் தவறாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும்.
சமீபத்தில் EPFO சில சந்தர்ப்பங்களில் காசோலை பக்கத்தின் படம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கை பதிவேற்றுவதற்கான கட்டாய விதியை தளர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது ஆன்லைன் க்ளெய்ம்களை விரைவாகத் தீர்க்க உதவும். புகைப்படங்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாததால் பல க்ளெய்ம்கள் நிராகரிக்கப்படுகின்றன. இப்படி நிராகரிக்கப்படும் கோரிக்கைகளின் எண்ணிக்கையை இது குறைக்கும்.
சம்பந்தப்பட்ட வங்கி/NPCI மூலம் வங்கி KYC -யின் ஆன்லைன் சரிபார்ப்பு, DSC ஐப் பயன்படுத்தி நிறுவனத்தால் வங்கி KYC சரிபார்ப்பு, UIDAI ஆல் சரிபார்க்கப்பட்ட ஆதார் எண் போன்ற சில தகுதியான வழக்குகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்று EPFO அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.