கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது தனியாக எங்காவது செல்லும் போது, நமக்கு பயமும் பதற்றமும் உண்டாவது மிகவும் இயல்பான விஷயம். இந்த சமயத்தில் நமது உடல் மொழியும், நாம் பதற்றமாக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொடுத்து விடலாம். எனவே, உங்கள் உடல் மொழி மூலம் கெத்தாகவும், வசீகரமாகவும் இருப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
நீங்கள் பதற்றமாக இருப்பதை எப்போதும் உடல் மொழி மூலம் காட்டிக்கொள்ள கூடாது. உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்து, தோள்பட்டைகளை விறைப்பாக வைத்துக்கொள்ளாமல் நிதானமாக இருங்கள். அப்போதுதான் பிறர் உங்களிடம் வந்து பேச, அவர்களுக்கே தன்னம்பிக்கை வரும்.
தோரணை:
நேர்பட பேசுவது, நேர்கொண்ட பார்வை இவை அனைத்துமே நமது தகுதியை உயர்த்திக்கொள்ளும் உடல் மொழிகளாகும். எனவே, எங்காவது செல்லும் போது குணிந்து இருக்காமல், நிமிர்ந்த நன்னடையுடன் இருங்கள்.
முகபாவனைகள் :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, பலர் தங்கள் முகத்தை, மனதின் கண்ணாடியாக வைத்துக்கொள்வர். எனவே, புது இடங்களுக்கு செல்லும் போது முக பாவனைகளை நடுநிலையாக வைத்துக்கொள்ளுங்கள்.
கவனம்:
எதிராளி உங்களிடம் என்ன பேசுகிறார் என்பதை கவனம் கொடுத்து கேட்க வேண்டும். இது, பிறரை ஈர்க்கும் ஒரு நல்ல உடல் மொழிகளுள் ஒன்றாகும்.
பார்வை:
யாருடன் பேசினாலும், அவரது கண்களை பார்த்து பேச கற்றுக்கொள்ளுங்கள். இது நீங்கள் தன்னம்பிக்கையான ஆள் என்பதையும், நம்பகமான ஆள் என்பதையும் காண்பிக்கும்.
கை செய்கைகள்:
பலருக்கு பேசும் போது கைகளை அசைத்து பேசும் பழக்கம் இருக்கும். நீங்கள் பேசுகையில், எந்த இடத்தில் தேவையோ அப்போது உங்கள் கைகளை நல்ல விதத்தில் அசைத்து பேசலாம். ஆனால், அது நீங்கள் பேசுவதில் இருந்து பிறர் கவனத்தை திசை திருப்பும் அளவிற்கு இருக்க கூடாது.
நிதானமான குரல்:
நாம் ஏதேனும் ஜோக் ஆன விஷயத்தை கரடு முரடான டோன் உடன் கூறினால்கூட அது பெரிய பிரச்சனையாகி விடலாம். எனவே, மென்மையான அல்லது நிதானமான குரலில் பிறருடன் பேசுங்கள். சத்தமாக அல்லது சத்தம் குறைவாக பேசுவதை தவிர்க்கவும்.