கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா... கடன் வலையில் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்!
கிரெடிட் கார்டைப் பற்றி நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். எனினும், அதனை பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்டால், கடன் வலையில் சிக்காமல் தப்பிப்பதோடு, ஆதாயங்களையும் அடையலாம்.
கிரெடிட் கார்டுகள் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பலன்கள் மாறுபடும். நீங்கள்எந்த கிரெடிட் கார்டை தேர்வு செய்தாலும், அது உங்கள் நிதித் தேவைகளுடன் பொருந்தக்கூடிய மிகக் குறைந்த கட்டணங்கள், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பலன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரே ஒரு கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்துவது எப்போதுமே நல்லது. நினைவில் கொள்ளுங்கள், உங்களிடம் அதிகமான அட்டைகள் இருந்தால், நீங்கள் பெரிய அளவில் கடனில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிரெடிட் கார்டில் செலவு செய்வது கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஏனெனில் அது உங்களுக்கு அதிக அளவில் செலவு செய்ய வசதியாக இருக்கும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செலவழித்த தொகையையும் திருப்பித் தர வேண்டும். கடன் வரம்பு குறைவாக இருந்தால், வரம்பிற்குள் நீங்கள் செலவழிப்பதற்கும் அதைத் திருப்பிச் செலுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கும்.
பில்லிங் சுழற்சிக்குள் கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் மட்டுமின்றி அதிக வட்டி விதிக்கப்படும். நிலுவை தொகையை செலுத்த எவ்வளவு காலம் தாமதம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமதமாக அபராதம் விதிக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதைத் தவிர்க்க, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் பொருட்களை வாங்க உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவும். அதனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தினால், வட்டியில் இருந்தும் தப்பிக்கலாம்.