பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு... வங்கதேச போராட்டக்காரர்கள் ஆவேசம் - காரணம் என்ன?

Tue, 06 Aug 2024-12:29 pm,

வங்கதேச அரசு கொண்டு வந்த விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30% இட ஒதுக்கீட்டுச் சட்டம் சுமார் 300க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. 

 

அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் என்பது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் அழுத்தம் கொடுத்தனர். 

 

உள்நாட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறியதாக வங்கதேச ராணுவ தளபதி வாக்கார் உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். மேலும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டதாகவும் அவர் அறிவித்தார். 

 

ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணிநேரங்களில் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். சமூக வலைதளங்களில் பரவிய பல வீடியோக்களில் மாணவர்கள் அந்த இல்லத்தில் இருந்த பொருள்களை அடித்து உடைப்பதை பார்க்க முடிந்தது. ஷேக் ஹசீனாவின் இல்லத்தை சூறையாடிய இளைஞர்கள் ஷேக் ஹசீனாவின் ஆடைகள், அவர் பயன்படுத்தும் பொருள்கள், உள்ளாடை உள்பட பலவற்றையும் எடுத்துச் செல்லும் புகைப்படங்களை இங்கு காண முடிந்தது.  

 

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாவின் (Mashrafe Mortaza) வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் நரைல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 

மஷ்ரஃப் மோர்டாசா ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எம்.பி.,யாக இருக்கிறார்.  தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசால் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பாக மோர்டாசா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். 

 

மோர்டாசா இதுகுறித்து அமைதி காத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவ அமைப்பினர், சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. 

 

மஷ்ரஃப் மோர்டாசா வங்கதேச அணிக்காக 54 டி20ஐ, 220 ஓடிஐ, 36 டெஸ்ட் என 310 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 117 போட்டிகளில் அவர் கேப்டனாகவும் செயல்பட்டார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link