மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!
ஆன்மீக சுற்றுலா: ஏராளமான புனிதத் தலங்களைக் கொண்ட கோயில்களின் பூமியான இந்தியா, அமைதி மற்றும் ஆன்மீகத்தை விரும்புவோருக்கு ஒரு சொர்க்க பூமியாகும். இமயமலை யாத்திரைகளில் இந்துக்களுக்கு மிக முக்கிய யாத்திரைகளில் ஒன்றான சார் தாம் யாத்திரையின் சீசன் தொடங்கி விட்டது.
சார் தாம் யாத்திரை: யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதே சார் தாம் யாத்திரையாகும் இந்த யாத்திரைக்காக IRCTC ஒரு அசத்தலான பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்படி இதை புக் செய்வது, கட்டணம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
சென்னை: மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக கேதார்நாத் - பத்ரிநாத் யாத்திரை செல்ல பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி மற்றும் உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் இணைந்து இயக்குகிறது.
ரயில் நிறுத்தங்கள்: ஜூன் 20-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் ஜூன் 21-ம் தேதி சென்னை வந்தடையும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் உண்டு. எனவே இந்த இடங்களில் உள்ளவர்களும் ரயிலில் பயணிக்கலாம்
சுற்றுலா பயண காலம்: 12 இரவுகள் மற்றும் 13 நாட்கள் பயணத்தில், ரிஷிகேஷ் - ருத்ரபிரயாக், குப்தகாஷி, கேதார்நாத், ஜோஷிமத், பத்ரிநாத் மற்றும் முருகனுக்கான கார்த்திக் சுவாமி கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று மகிழலாம்.
டிக்கெட் கட்டணம்: இரண்டு வகை டிக்கெட்டுகளின் கீழ் இந்த ஆன்மீக யாத்திர பயணத்திற்கு ரூ.58,946 மற்றும் ரூ.62,353 செலவாகும். இந்த ரயிலில் 300 ஏசி III அடுக்கு இருக்கைகள் இருக்கும்.
ஹெலிகாப்டர் பயணம்: சுற்றுலா பயண கட்டணத்தில் குப்தகாஷி - கேதார்நாத் - குப்தகாஷி வழித்தடத்தில் ஹெலிகாப்டர் பயண டிக்கெட்டுகள் உள்ளடங்கும். சார் தாம் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர்-நவம்பர் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு யாத்திரை செய்வது முக்தி பெற உதவும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த புனித தலங்களுக்கு வருகை தருகின்றனர்.