ரன்களை வாரி வழங்கி பர்பிள் கேப்பை கைப்பற்றிய பஞ்சாப் பௌலர் - கலாய்க்கும் ரசிகர்கள்!
ஐபிஎல் லீக் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் டாஸை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணிக்கு வழக்கம்போல் பில் சால்ட் - சுனில் நரைன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. பவர்பிளேவில் 76 ரன்களை கொல்கத்தா அடித்தது. இரு பேட்டர்கள் அரைசதத்தை பதிவு செய்தனர். இந்த ஜோடி 138 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.
சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 71 ரன்களையும், சால்ட் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 75 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் சுனில் நரைன் 8 இன்னிங்ஸில் மொத்தம் 357 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் ரேஸில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 184.02 ஆக உள்ளது.
தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடினாலும் ரஸ்ஸல் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். ஷ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரின்கு சிங்கும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை குவித்து அசத்தியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கொல்கத்தா அணிக்கு இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இது 7வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் இதோடு 6வது முறையாக 250 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர் இதில் ராகுல் சஹார் மட்டுமே 8.20 எகனாமியில் பந்துவீச்சினார். குறிப்பாக, ரபாடா 3 ஓவர்களை மட்டும் வீசி 17.30 எகானிமியில் வீசினார். ஹர்ஷல் படேல் 16 ரன்கள் எகனாமியில் பந்துவீசியிருந்தார்.
ஹர்ஷல் படேல் மோசமாக பந்துவீசினாலும் அவர்தான் தற்போது தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் ஆவார். ஹர்ஷல் படேல் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவரின் ஒட்டுமொத்த எகானமி 10.18 ஆகும். எனினும், பர்பிள் கேப்பை அவர்தான் வைத்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் பும்ரா 13 விக்கெட்டுகளுடனும், 6.37 எகானமியுடனும் உள்ளார்.