மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து முக்கிய அப்டேட்

Thu, 19 Dec 2024-2:29 pm,

“இலவச பேருந்து பயணத்திட்டம்” மூத்த குடிமக்களுக்கு முக்கிய அப்டேட் தந்த தமிழக அரசு

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கென்று பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகள், தபால் நிலையங்கள், ரேஷன் கடைகள், ரயில் பயணம், பேருந்து, கோவில் சிறப்பு தரிசனம் மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓய்வூதியம் சார்ந்த திட்டங்கள் சலுகைகள் வெளியிடப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயணத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த ஆறு மாதம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர் போக்குவரத்து கழகத்தில் சென்னையை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2025 முதல் ஜூன் 2025 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 42 மையங்களில் வரும் 21 டிசம்பர் 2024 முதல் 31 ஜனவரி 2025 மாதம் வரை விடுமுறையின்றி அனைத்து நாட்களும் காலை 8:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், வழக்கும் போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரத்தில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிடச் சான்று (குடும்ப அட்டை), வயதுச் சான்று (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்விச் சான்றிதல், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் இரண்டு வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள் தங்களது அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான கட்டணமில்லா அரசுபேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மகளிர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link