Tax Deduction | மிடில் கிளாஸ் மக்களுக்கு Good News.. வருமான வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!
மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் நுகர்வு வருவாயை அதிகரிக்கவும் வரும் பிப்ரவரி பட்ஜெட்டில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான வருமான வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய வருமான வரி விலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மூன்று முதல் 7 லட்சம் ரூபாய்க்கு 5% எனவும், 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு 10% வரியும், அதேபோன்று 10 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 15% வரியும், 12 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு 20% வரியும், 15 லட்சத்திற்கு மேல் 30% வரி என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தற்போது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது.
புதிய வரி வசூல் முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் பழைய முறையில் வருமான வரி செலுத்தவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு இன்னும் வழங்கப்பட்டு உள்ளது. வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதில் பழைய வருமான வரி முறை அகற்றப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேநேரத்தில் புதிய வரி வசூல் முறையில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வருமான வரி குறையும் பட்சத்தில் பல கோடி பேர் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் சற்று பலன் அடைவார்கள். வரி விலக்கு அளிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் இருக்கும் அதிகமான பணம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
இந்தியா தனது வருமான வரியின் பெரும்பகுதியை குறைந்தபட்சம் 10 மில்லியன் ரூபாய் சம்பாதிக்கும் நபர்களிடமிருந்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வருமான வரி விலக்கு குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும், வரி விலக்கு அளிக்கப்பட்டால், அதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி சீர் செய்வது? எவ்வளவு வருமான வரி விலக்கு அளிப்பது? போன்ற விசியங்களை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.