மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு

Tue, 11 Jun 2024-9:32 am,

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. இந்த வேளையில் அரசு சார்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று ஓய்வூதியம் பற்றியது. அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. 

தற்போது என்பிஎஸ் முறையில், சந்தை அடிப்படையிலான வருவாய் முறை உள்ளது. அரசாங்கத்தின் முன்மொழிவு இதிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை அளிக்கும். இதில் கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக பெற உத்தரவாதம் இருக்கும் என கூறப்படுகின்றது. 

மார்ச் 2023 இல், நரேந்திர மோடி அரசாங்கம் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை நிறுவியது. எதிர்காலத்தில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்த பழைய ஓய்வூதிய முறைக்கு (Old Pension Scheme) திரும்பிச் செல்லாமல் புதிய ஓய்வூதிய முறையிலேயே  ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த குழு ஆராயும் என கூறப்பட்டது. பல மாநிலங்கள் NPS ஐ கைவிட்டு OPS க்கு திரும்பியதால் இந்த குழு அமைக்கப்பட்டது. 

இந்தக் குழுவிற்கு இந்தப் பணிக்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் சிறப்புச் செயலர் ராதா சௌஹான், அன்னி மேத்யூ மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தீபக் மொஹந்தி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். மே மாதம் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இது 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்திரப் பிரதேச NPS மாதிரியுடன் அதிக அளவில் ஒத்துப்போவதகவும் கூறப்படுகின்றது. 

ஆந்திரப் பிரதேச உத்தரவாத ஓய்வூதிய அமைப்பு (APGPS) சட்டம், 2023 இன் கீழ், வருடாந்திரத் தொகை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், ஒரு டாப்-அப் மூலம் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவது உறுதி செய்யப்படுகின்றது. மேலும், ஊழியர் இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு உத்தரவாதத் தொகையில் 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 

APGPS சட்டம், பகுதியளவு வித்ட்ராயல் மற்றும் இறுதியாக பணம் எடுத்தல் ஆகியவை உத்தரவாத ஓய்வூதியத்தை விகிதாச்சாரத்தில் குறைக்கும் என்றும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மேம்பட்ட பலன்களையும் வழங்கி, அரசாங்க அமைப்பின் நீண்டகால நிதி இலக்குகளிலும் நெருக்கடி வராமல் இது பார்த்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது. 

முன்மொழியப்பட்ட திட்டம், கடையாக பெறப்பட்ட ஊதியத்தில் 40-50 சதவீத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். சேவையின் ஆண்டுகளின் அடிப்படையிலும் ஓய்வூதியத் தொகையிலிருந்து ஏதேனும் பணம் எடுக்கப்பட்டிருந்தால், அதன் அடிப்படையிலும், இறுதி தொகை தீர்மானிக்கப்படும். உத்தரவாத ஓய்வூதியத் தொகையைப் பூர்த்தி செய்யத் தேவையான ஓய்வூதியத் தொகையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மத்திய அரசின் பட்ஜெட்டில் ஈடுசெய்யப்படும்.

இந்த என்பிஎஸ் முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், 2004 முதல் NPS-ல் பதிவு செய்யப்பட்ட சுமார் 8.7 மில்லியன் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் சரியான தொகை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், மொத்தமாக திரட்டப்பட்ட கார்பஸை வருடாந்திர (ஆனுவிட்டி) அல்லது அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதால், கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான தொகையை ஓய்வூதியமாக பெறலாம் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link