கிசுகிசு : மாஜிக்கு ஜாமீன் தள்ளிப்போனதால் அதிரடி முடிவெடுத்த முதன்மையானவர்..!
கடையில் ஆளே இல்லாமல் அமர்ந்திருந்த டீ மாஸ்டர், குசும்பன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த நொடியில் வெள்ளை வேட்டி சட்டையோடு வந்த குசும்பன், " அண்ணே, என்ன வெயிட்டிங்?" என கேட்க, "என்னப்பா, ஆளையே காணோம், கோட்டை பக்கம் ஏதாவது மேட்டரா?" என மாஸ்டர் பதில் கேள்வியை போட்டார்.
"ஓகே, ணா... ரொம்ப நேரம் காத்திருப்பீங்க போல.... நேரா மேட்டருக்கே வந்துடுறேன். கோட்டை வட்டாரத்தில அதிகாரிகள் மாற்றம் அதிரடியா நடந்துட்டு இருக்கு. ஆனால் கேபினட் மாற்றம் மட்டும் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கு.
ஆகஸ்ட் 19 ஆம் தேதியே கேபினட் மாற்றத்துக்கு அரசு ரெடியா தான் இருந்துச்சு. ஆனால் அது திடீரென தள்ளி வைக்கப்பட்டது. ஏன்னு விசாரிக்கும்போது, சிறையில் இருக்கும் மாஜி அமைச்சருக்காக தான் இந்த கேபினட் மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டிருக்காம்.
அவருக்கு எப்படியும் ஜாமீன் கிடைச்சிரும்னு ஆளும் தரப்பு எதிர்பார்த்து இருந்துச்சாம். ஆனால், அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் கிடைக்ககூடாதுன்னு வேண்டுமென்றே தாமதம் செஞ்சதால இன்னும் ஒரு சில நாட்களுக்கு அவரோட ஜாமீன் தள்ளிப்போய் இருக்காம்.
இந்த முறை எப்படியும் ஜாமீன் கிடைச்சிரும், தள்ளிப்போக வாய்ப்பே இல்லைன்னு வழக்கறிஞர்கள் டீம் சொல்லியிருக்கிறதால, கேபினட் மாற்றத்த தள்ளிப்போட்டிருக்கும் ஆளும் தரப்பு, மாஜியின் ஜாமீன் வழக்கு அப்டேட்ட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதாம்
இன்னொருபுறம் ஒபாமா ஊருக்கு பறக்குது முன்னால கேபினட் மாற்றம் கட்டாயம் செஞ்சிருனும் என்ற முடிவில் இருக்கும் முதன்மையானவர், புதிய கேபினட் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கிறாராம்.
இப்போது பெரிய மாற்றம் பண்ணிட்டு, மாஜி வழக்கு சாதகமாக வந்தால் அவரை அப்புறம் கேபினட்டுல சேர்த்துகிலாம்ங்கிற ஐடியாவும் முதன்மையானவருக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதையும் கவனத்தில் கொண்டிருக்கும் முதன்மையானவர் இன்னும் ஓரிரு நாட்களில் கேபினட் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம். மாஜி வெளியே வந்தால் அவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் என சிறை மாஜிக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்காம்.
அதேநேரத்தில் இப்போது கேபினட்டில் இருக்கும் மூத்த தலைகள் இரண்டு பேர் நீக்கப்பட்டு அவர்கள் இடத்துக்கு புதிதாக ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அத்துடன் இப்போது இருக்கிற துறைகளும் பெரிய அளவில் கேபினட்டுகளுக்கு மாற்றி கொடுக்கப்பட இருக்கிறது." என சொல்லி முடித்த குசும்பன் அவசரமாக ஏதோ வேலை இருக்குன்னு டீ மாஸ்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.