மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் காத்திருப்பு..
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என 2022 ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு சட்டசபையில் பேசிய பழனிவேல் தியாகராஜன், தனி நபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் செலவாகிறது என்றும், அதே நேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனி நபருக்கு ₹50,000 வரை தான் செலவாகிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லாதது என்றார்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு தொழில் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுக்குறித்து அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் எழுந்தது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2024 ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. அங்கு மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார் என ஜாக்டோ ஜியோ சங்கம் தெரிவித்திருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து. ஆனால் இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் மீண்டும் நடை முறைப்படுத்தப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல் படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்குமே புதிய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படும் என அப்போதைய அதிமுக அரசு தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கவே புதிய ஓய்வு திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் பாதித்தொகையை பெற்று வந்தனர். தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட புதிய என்பிஎஸ் (NPS) திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பஞ்சப்படியில் 10% பங்களிப்புத் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. அதே அளவு தொகையை அரசும் கூடுதலாக சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது