இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தமிழக அரசை எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்

Mon, 18 Nov 2024-9:21 pm,

தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்ததை அடுத்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்!

அரசு தகவல் தொகுப்பு விவர மையம், ஓய்வூதியத் துறை இயக்குநரகம் ஆகியவற்றை கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைத்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு எத்தருணத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தாது என்பதையே நிதித்துறையின் அரசாணை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது -தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு அரசு ஆணை மூலம் ஓய்வூதியத் துறை இயக்குனரகத்திற்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. ஓய்வூதிய இயக்குநகரம் என்பதும் ஒழித்து கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இல்லை என்பதற்கு இது தான் சான்று எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்களைப் பொறுத்தவரை வாக்குறுதிகள் எள்ளளவும் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, தற்போதைய ஓய்வூதிய இயக்குனரகம் இணைப்பு பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் உள்ளோருக்கு இனிமேல் ஓய்வுதியம் என்பது காணல் நீர்தான் என்பதை தமிழக அரசு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாகவும் தலைமைச் செயலக சங்கம் தெரிவித்திருக்கிறது. 

இதற்கு மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தலைமைச் செயலக சங்கம் 7 லட்சம் ஓய்வுதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 90% கருவூலங்கள் கணக்குத் துறையின் செயல்பாடுகளால் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குறைகளை ஓரளவேனும் தீர்க்கும் ஒரு அரணாக இருந்த ஓய்வூதிய இயக்குநர் துறையை மூடுவது என்பது ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் நலன் குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்படவில்லை என்பதனையே காட்டுகிறதுஎன தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குறித்து எந்த வாக்குறுதியையும் வழங்காததற்கும், திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் உடனடியாக நிதித்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஓய்வூதிய இயக்குனரகம் பழைய நிலையிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link