சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேருங்க
இரத்த சர்க்கரை அளவை சில எளிய இயற்கையான வழிகளில் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் சுகர் லெவலை குறைக்க தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வெந்தயம் ஒரு சஞ்சீவினியாக பயன்படுகிறது. இதை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் குடிக்கலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இது உணவின் செரிமானத்தை சீராக்குவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பாகற்காய் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் காயாகும். நீரிழிவு நீயாளிகள் தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது நாள் முழுதும் சுகர் லெவலை சரியான அளவில் பராமரிக்க உதவும்.
வேம்பின் சுவை கசப்பு. இதன் காரணமாக பலர் இதை உட்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், வேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது, முக்கியமாக இதன் கசப்புத்தன்மையும், பண்புகளும் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிய அளவில் உதவுகின்றன.
நெல்லிக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பழமாகும். இதில் குரோமியம் அதிகமாக உள்ளது. இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கனிமமாக செயல்படுகிறது. இதை உட்கொள்வதால் ஆரோக்கியமான வழியில் இரத்த சர்க்கரை அளசை கட்டுக்குள் வைக்க முடியும். இது யூரிக் அமிலத்தை கடுப்படுத்தவும் உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் நாவல் பழத்தை உட்கொள்ளலாம். இதில் ஜாம்போலின் என்ற கலவை உள்ளது. இது பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
ஆளிவிதையில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் மற்றும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ஆளி விதைகள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தவும் உதவும்.
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சுகர் நோயாளிகள் தினமும் காலையில் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம். இதை சமையலிலும் பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.