உடல் பருமன் உடனே குறைய சுலபமான வழி: காலையில் இதை செய்தால் போதும்
உடல் பருமன் ஒருவரது ஆளுமையை குறைத்து தன்னம்பிக்கையை தகர்ப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் பலவித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. ஆகையால் எடை அதிகரிக்க தொடங்கிய உடனேயே அதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சிலர் உடல் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் அனைவருக்கும் இவற்றால் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை சரி செய்யலாம்.
தொப்பை கொழுப்பு, இடுப்பு கொழுப்பு ஆகியவற்றை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காலை வேளை பழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் உட்கொள்வது சிறந்த பழக்கமாக கருதப்படுகின்றது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றையும் பிழிந்து குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை வேகமாக குறைக்க உதவுகின்றது. காலையில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது கொழுப்பைக் குறைக்க சரியான வழியாக பார்க்கப்படுகின்றது.
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி இன்றியமையாத ஒரு விஷயமாகும். தினமும் காலையில் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு உடல் செயல்பாட்டை செய்வது நல்லது. இது நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
காலை உணவு இன்றியமையாத உணவாகும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு காலை உணவை நாம் உட்கொள்வதால் சமச்சீரான உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிவை நிறைந்த காலை உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக எண்ணெய், கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
போதுமான உறக்கம் இல்லாமல் காலையில் விழித்துக் கொள்வது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். போதுமான தூக்கம் இல்லாத நிலை ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக தொப்பை பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்படுவது அதிகமாகின்றது. மேலும் பசியும் அதிகமாகின்றது. கலோரிகள் முறையாக எரிக்கப்பட்டு கொழுப்பு சேராமல் இருக்க குறைந்தபட்சம் 7-8 மணி நேரமாவது தூங்குவது மிக அவசியமாகும்.
மன அழுத்தம் கொழுப்பு சேர காரணமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால் மனதில் அழுத்தம், இறுக்கம் இல்லாத நிலையில் வைத்துக்கொள்வது அவசியமாகும். மன அழுத்தத்தை குறைக்க காலையில் தியானம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி 5 நிமிடங்கள் செய்யும் தியானமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை, இலவங்கப்பட்டை, சீரகம், ஓமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலான மூலிகை தேநீரை பருகலாம். இது கலோரிகளை எரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.