Heavy Rain | மாணவர்கள் கவனத்திற்கு.. இன்று இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளா, தெற்கு கர்நாடகா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ய்பு இருப்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அக்டோபர் 24 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான முதல் அதிக மழை பெய்யும் என்றும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் அக்டோபர் 23 அன்று கடுமையான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறக் கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு டானா புயல் என பெயர் சூட்டியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டு உள்ளார்.
கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.