மத்திய அரசு தரும் ரூ.82,000 ஸ்காலர்ஷிப் - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெறுவது எப்படி?

Tue, 17 Dec 2024-3:23 pm,

மத்திய அரசு பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் (PM-USP) யோஜனா என்ற திட்டத்தின் கீழ்12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும், இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித் தொகையை (Scholarship) மத்திய அரசின் கல்வி அமைச்சகம் கொடுக்கிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டதாரி / முதுகலை பட்டப்படிப்பு மற்றும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 82,000 புதிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. 18-25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் (PM-USP) யோஜனா கல்வி உதவித் தொகையில் 50% ஸ்காலர்ஷிப் பெண்களுக்காக ஒதுக்கபட்டுள்ளது.

10+2 என பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளோமா, தொலைதூர கல்விகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசின் வேறு எந்தவிதமான ஸ்காலர்ஷிப் திட்டங்களிலும் பயனாளியாக இருக்கக்கூடாது. பெற்றோர்/குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்காக வருமானவரிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை, 12 ஆம் வகுப்பு முடித்து இளங்கலை படிப்பில் சேருபவர்கள், இளங்கலை முடித்து முதுகலை படிப்பு சேருபவர்க்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவேளை முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க தவறினால் இரண்டாம் ஆண்டில் கூட விண்ணப்பிக்க முடியும். பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் (PM-USP) யோஜனா கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும், கல்லூரி வருகைப் பதிவேடு 75% குறையாமல் இருக்க வேண்டும். ஒழுக்கமின்மை உள்ளிட்ட ஏதேனும் புகார்கள் இருந்தால் அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும்.

இந்த கல்வி உதவித் தொகை வேண்டும் என விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (www.scholarships.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கல்வி உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படுகின்றன. மாணவர்களின் சாதி, கல்வித் தகுதி போன்ற சான்றிதழ்கள் MeITY, Govt இன் DIGILOCKER வசதி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். 

 

நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் (NSP) (www.scholarships.gov.in) போர்ட்டல் மூலம் இந்த கல்வி உதவித் தொகைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை இரண்டு வழிகளில் அரசு சரிபார்க்கும். அதாவது மாணவர் படிக்கும் கல்வி நிறுவனம் மூலம் சரிபார்க்கப்படும் அல்லது மாநில உயர்கல்வித் துறை மூலம் விண்ணப்பதாரரின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.

மாணவ, மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் வழியாக எப்போது இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகும். அந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே மத்திய அரசின் இந்த கல்வி உதவித் தொகை கிடைக்கும். 

ஸ்காலர்ஷிப் விகிதம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளின் முதல் மூன்று ஆண்டுகளுக்கான பட்டப்படிப்பு மட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12,000/-ஆகவும், முதுகலை மட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20,000/-ஆகவும், தொழில்முறைப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள், ஐந்து (5) ஆண்டுகள் உள்ளவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டில் ஆண்டுக்கு 20,000 கொடுக்கப்படும். பி.டெக், பி.இன்ஜிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை படிப்புக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் முறையே தலா 12 ஆயிரம் ரூபாய், 4 மற்றும் 5வது ஆண்டில் 20 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்கும்.

மாணவ, மாணவிகள் தங்களது பெயரில் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித் தொகை செலுத்தப்படும். பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) போர்டல் [https://pfms.nic.in/Users/LoginDetails/Login.aspx] பக்கத்தில் ஆதார் எண்ணை உள்ளிட்ட மாணவ மாணவிகள் தங்களின் ஸ்காலர்ஷிப் தொகை செலுத்தப்பட்டது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

 

மாணவ, மாணவிகள் படிக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையின் போது "PM-USP CSSS" கல்வி உதவித் தொகை திட்டம் பற்றி தெரிவிக்கும். இந்த திட்டம் குறித்து ஏதேனும் குறைகள்/புகார் இருப்பின், http://pgportal.gov.in/grievancenew.aspx மூலம் தெரிவிக்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link