சிங்கிளாக இருக்கும் சிங்கப்பெண்ணா நீங்கள்? அப்போ ‘இந்த’ விஷயத்தில் உஷாரா இருங்க..
பெண்கள் தனியாக வாழ்வதும், தனியாக வேறு நகரத்திற்கு குடி பெயர்வதும் தற்போது மிகவும் சகஜமான விஷயமாக மாறி விட்டது. வேலைக்கு செல்லும் பல பெண்கள், நிதி ரீதியாக சுதந்திரமாக உள்ளனர். ஆனாலும், அவர்கள் சில விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா?
பெண்கள், பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் முதலில் தங்களின் செலவுகள் என்னென்ன என்பதை பார்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க எவ்வளவு ஆகின்றது, தனக்கான செலவுகள் எவ்வளவு ஆகின்றது என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். இதனால், தங்களுக்கான பட்ஜெட்டை அவர்கள் உருவாக்கி கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
தனது பட்ஜெட்டை பராமறிக்கும் போது, பேங்க் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தான் வேலைக்கு செல்லவில்லை என்றால் கூட, அடுத்த ஆறு மாத காலத்திற்கு தன் செலவுகளுக்கு தேவையான பணம் வங்கியில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
பெண்கள், பணத்தை சேமித்து வைப்பதோடு மட்டுமன்றி தங்களுக்கான ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
தனியாக வாழும் பெண்கள், தங்களின் நிதி நிலைமையை தற்காத்து கொள்வதற்காக மியூச்சுவல் ஃபண்ட்கள், ஃபிக்சட் டெப்பாசிட் உள்ளிட்ட திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்யலாம். தேசிய ஓய்வூதிய திட்டம், எஸ்.பி.ஐ திட்டம் என பல்வேறு சேமிப்பு திட்டங்களும் தற்போது பல கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வழியில் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு வகையில் பணத்தை சம்பாதிப்பதற்கான வழி வகைகளையும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது, அவர்களுக்கு நிதி சார்ந்து வளர உதவும் நல்ல வழியாக இருக்கும். திறன் மேம்பாடு, தொழில்முறை படிப்புகளை படித்து வைத்துக்கொள்வதும் மிகவும் நல்லது.
தனியாக வசிக்கும் பெண்களுள், 2 சதவிகிதம் பேர் மட்டுமே ஓய்வூதிய திட்டத்தில் சேமித்து வைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, தாமதிக்காமல் இப்போதே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.