அட்டகாசம் செய்யும் குழந்தைகளை அடிக்காமல் அடக்குவது எப்படி? இதோ டிப்ஸ்!
குழந்தைகள் வெறும் கல்தான், அவர்களை சிற்பமாக செதுக்குவது பெற்றோரின் வேலை என பலர் கூற நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது மிகப்பெரிய உண்மை என பலர் நம்புகின்றனர். காரணம், நாம் சிறுவயதில் இருந்து எந்த விஷயங்களை பார்த்து/படித்து/பழகி வளர்கிறோமோ அதையே குணாதிசயமாக எடுத்துக்கொண்டு வளர்கிறோம். குழந்தைகளுக்கு இயல்பாகவே கோபம், அழுகை, சோகம், அடம்பிடிப்பது என பல குணாதிசயம் இருக்கும். இதை காணும் பல பெற்றோர் உடனே தன் குழந்தை சொல்பேச்சை கேட்கவில்லை என்றால் திட்டவோ அடிக்கவோ ஆரம்பித்து விடுகின்றனர். இதை செய்யாமல் ஒரு குழந்தையை நல்வழிப்படுத்துவது எப்படி?
முதலில், குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்களை சத்தமாக திட்டுவதை தவிர்க்கவும். பிற நேரங்களில் சகஜமாக இருக்கும் தனது பெற்றோர், ஏன் இப்போது மட்டும் வேறு ஒரு மனிதர் போல நடந்து கொள்கிறார் என பல குழந்தைகளுக்கு தோன்றும். எனவே, தான் செய்த தவறை எண்ணி வருந்துவதை விட, தான் தவறு செய்தால் அம்மா/அப்பா என்ன செய்வாரோ என்ற பயத்தினாலேயே உங்களை விட்டு விலகி இருப்பர். எனவே, அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதையோ சத்தமாக பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை திட்டுவதற்கு முன்னர் ஏன் அதை செய்தார் என்பதை கேளுங்கள். அந்த தவறினால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியும், ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்கவும். அதன் பிறகு நீங்கள் கூறும் அறிவுரையை பொறுமையாக எடுத்து கூறலாம்.
பெரும்பாலான பெற்றோர்கள், தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தங்களின் குழந்தைகள் மீது திணிக்கின்றனர். உதாரணத்திற்கு, அவர்கள் வகுப்பில் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாமே தவிர, அந்த ஆசையை குழந்தைகளிடம் திணித்தால் அது வெவ்வேறு விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் பல பெற்றோர்கள் குழந்தகளை கத்துகின்றனர். இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விட வேண்டும்.
குழந்தைகளின் நெகடிவான செயல்பாடுகளை மட்டுமே கவனிக்கும் பெற்றோர், அதற்கு பின்னால் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை பார்ப்பதே இல்லை. அவர்கள் மனசோருவுடனோ, அல்லது கவலையுடனோ காணப்பட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை கேளுங்கள். அவர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களின் உலகிற்குள் சென்று, அவர்களை புரிந்து கொள்ள முடியும்.
குழந்தைகள் அடம் பிடிப்பது சகஜம். அவர்கள், ஏதேனும் ஒரு பொருளை கேட்டு அடம் பிடித்து கதறி அழுதால் அழட்டும் என விட்டுவிடுங்கள். அவர்கள் இப்படி செய்வதற்கு காரணம், நாம் கேட்கும் பொருளை எப்படியும் பெற்றோர் வாங்கி கொடுத்து விடுவர் என்ற உள்நோக்கத்தோடுதான். எனவே, அவர்கள் அழுது முடித்த பிறகு அந்த பொருளை ஏன் வாங்கி கொடுக்க முடியாது என கூறி புரிய வையுங்கள்.
குழந்தைகள், சிறிய வடிவில் இருக்கும் பெரியவர்கள் என கூறுவர். அவர்களுக்கும் பிறரை போலவே அவர்கள் செயலுக்கான பின்விளைவுகளை கூறி புரியவைத்தால் புரிந்து விடும். அவர்கள் உங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கும் போதும், அவர்களை அடிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றும் போதும் அவர்களை விட்டு சில நிமிடங்களுக்கு விலகியிருங்கள். ஆசுவாசப்படுத்திக்கொண்டு, உங்கள் மன நிலை சரியான பிறகு அவர்களிடம் சென்று பேசலாம்.