கலைஞர் உரிமைத் தொகை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?
திமுக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும், அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது.
வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிருக்கு ரேஷன் கார்டு மற்றும் பல்வேறு பொருளாதார நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுவும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் (Kalaingar Magalir Urimai Thogai) பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படுகிறது. இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
சிலருக்கு இந்த திட்டத்தில் தகுதிகள் இருந்தும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எதிர்த்து தகுதி வாய்ந்த பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இ-சேவை மையங்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் இ-சேவை மூலம் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் அரசு மேல்முறையீட்டு மனுக்களை முதலில் பரிசீலித்து அதில் தகுதிவாய்ந்த மகளிருக்கு முன்னுரிமை கொடுக்கும். அதன்பிறகே புதிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விரைவில் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் நடக்க இருக்கிறது.
பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் ஆன்லைன் மூலம் அரசுக்கு புகார் தெரிவிக்க முடியும்.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதில் புகார் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். https://kmut.tn.gov.in/public_complaints.html என்ற பக்கத்தில் தகுதி அல்லாத பயானிகள் குறித்து நீங்கள் ஆன்லைனில் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள், கலைஞர் உரிமைத் தொகை பெறும் தகுதியற்ற நபரின் பெயர், மொபைல் எண், மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம், ரேஷன் கடை, முகவரி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
பின்னர் அவர்கள் என்ன காரணத்திற்காக தகுதியில்லாதவர்கள் என்பதை விவரிக்க வேண்டும். அங்கேயே, தகுயின்மை காரணங்கள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் கிளிக் செய்தால் போதும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளது. குடும்பத்தில் அரசு ஊழியர்கள் /அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ளனர். குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் அல்லது வருமான வரி செலுத்துபவர் உள்ளனர். குடும்பத்தில் சொந்த பயன்பாட்டுக்கான நான்கு சக்கர வாகனம் உள்ளது. குடும்பத்தின் மொத்த நிலம் திட்டத்தின் தகுதி வரம்புக்கு மீறி உள்ளது.
குடும்பத்தில் ஆண்டுக்கு 50 இலட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர் உள்ளனர். குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் உள்ளனர். குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். குடும்பத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து பிற ஓய்வூதியம் பெறுபவர் உள்ளனர். ஒரே குடும்பத்தில் இரண்டு நபர்கள் உரிமைத் தொகை பெறுகின்றனர் என்ற காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த காரணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட யாரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெற முடியாது. ஒருவேளை உங்களுக்கு தெரிந்தால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் மற்றும் முகவரியை கொடுக்க வேண்டும். கடைசியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை கொடுத்து ஓகே செய்தால் புகார் பதிவாகும். அதனடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.