காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்
காதல் வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் பல்வேறு விதமான உணர்ச்சி நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். அன்பான, பரிவான காதல் வாழ்க்கையில் சில நேரங்களில் பொறாமை குணமும் எட்டிப் பார்க்கும்.
இது சந்தேகம், பாதுகாப்பின்மை போன்ற உணர்ச்சி நிலைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக உங்கள் காதலி வேறொருவருடன் சிரித்து பேசுவதை பார்க்கும்போது மனம் பாரத்தின் உச்சத்துக்கே சென்றுவிடும்.
உங்களுடன் இருப்பதைக் காட்டிலும் வேறொருவடன் சிரித்து பேசிக் கொண்டு அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று தெரிந்துவிட்டால், சந்தேகம் பல கிளைகளாக பிரிந்து மனதுக்குள் அலைபாய தொடங்கும்.
இது ஒருகட்டத்தில் உங்களின் அருமையான காதல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொறாமை குணத்தை அகற்றவும், உங்களை எப்படி ஆசுவாசப்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குள் பொறாமை வந்துவிட்டது எப்படி எல்லாம் வெளிப்படும் என்றால் காதலி பிறருடன் பேசுவதை அன்பாக கண்டிப்பீர்கள். அது தொடரும்பட்சத்தில் கொஞ்சம் கோபம் வெளிப்படும்.
சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் காதலியுடன் சண்டை போட தொடங்குவீர்கள். கேள்விகள் எழுப்புவது அதிகரிக்கும். அந்த கேள்விகள் காதலிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இந்த விஷயத்தை தவிர்க்க காதலி மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
உங்கள் இருவருக்கும் இடையிலான நம்பிக்கை பலமாக இருக்கும்போது மூன்றாவது நபரின் என்ட்ரி வர வாய்ப்பே இல்லை. ஒருவருடன் பேசுவது என்பது உங்கள் உறவில் விரிசல் ஏற்படும் என்று நினைப்பது தவறானது.
உங்கள் காதலிக்கு போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாதபோது, அவர்கள் மனதில் தான் அவருக்கு முக்கியமில்லையோ என்ற எண்ணம் எழும். அந்த ஆற்றாமையை போக்ககூட பிறருடன் பேசி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
அதனால் உங்களின் காதலிக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முன்வாருங்கள். காதலியின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உங்களின் அரவணைப்பையும், அன்பான வார்த்தைகளையும் பேசி அவர்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்.
சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் மீதான நம்பிக்கையை காதலிக்கு ஏற்படுத்தும். அவர்களுக்குள் தனிமை எண்ணம் எழாமல் பார்த்துக் கொள்வதே காதலனின் மிகச் சிறந்த குணம்.
இதனையும் மீறி உங்களுக்குள் பொறாமை வருகிறது என்றால் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சி செய்யுங்கள். அதனை இருவரும் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
காதலிக்காக உங்களின் நடத்தைகளை சில மாற்றம் செய்து கொள்வதில் தப்பில்லை. பரஸ்பரம் புரிதல் இருக்கும்போது இருவருக்கும் இடையே சந்தேகமே வராது. மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.