வேலையில் சீக்கிரமாக ப்ரமோஷன் கிடைக்கணுமா? அப்போ ‘இதை’ பண்ணுங்க பாஸ்..!

Thu, 21 Mar 2024-1:23 pm,

ஒருவருக்கு வேலை கிடைப்பதற்கு வேண்டுமானால் அவர்கள் படித்த பட்டப்படிப்பு உதவலாம். ஆனால், அந்த வேலையை தக்க வைத்து கொள்வதற்கும் பதவி உயர்வை பெருவதற்கும் ஒரு தனி நபரின் திறன்கள் மட்டுமே உதவும். அந்த வகையில், விரைவில் உங்கள் வேலையில் பதவி உயர்வை பெறுவதற்கு சில திறன்களை பெற்றிருக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனடியாக எப்படி தீர்க்க வேண்டும் என்ற திறன், யாருக்கு இருக்கிறதோ அவரையே தலைமையில் அமர்த்தும், உங்கள் நிறுவனம். எனவே உங்களிடம் பிரச்சனைகளை கையாளும் திறன் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இந்த திறன் இருந்தால் ஒரு கூட்டத்திற்கே தலைவராகும் திறனும் உங்களுக்கு வளரும். 

நீங்கள் தனி நபராகத்தான் உங்களது வேலையை செய்யப்போகிறீர்கள் என்றாலும், உங்களது சக அலுவலர்களின் உதவி உங்களுக்கு எல்லா இடத்திலும் தேவைப்படலாம். எனவே, உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளில் ஏதேனும் சந்தேகம், அல்லது அதில் கைதேர்ந்த ஒருவரின் வழிகாட்டல் வேண்டுமென்று நினைத்தால் அவருடன் கலந்துரையாடி Team Work செய்யலாம். இது உங்களை விரைவாக பதவி உயர்வை நோக்கி நகர செய்யும். 

எந்த இடத்திற்கு போனாலும் அதற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை நிறைந்தவராக நீங்கள் இருத்தல் நல்லது. இது தொழில் ரீதியாக மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். அதே போல, எது வந்தாலும், எது தெரியவில்லை என்றாலும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திறந்த மனநிலை கொண்டவராக நீங்கள் இருத்தல் நல்லது. இதுவும் உங்கள் பதவி உயர்விற்கு உதவும் திறன்களுள் ஒன்று. 

தனிப்பட்ட வாழ்க்கை-அலுவலக வாழ்க்கை என இரண்டையும் சமாளிப்பது சமயங்களில் சவாலான விஷயமாக இருக்கலாம். வேலையில் ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதிலிருந்து கற்றுக்கொண்டு, பின்பு உங்களை நீங்களே மெருகேற்றிக்கொள்வது உங்கள் அலுவலக வாழ்க்கையை எளிதாக்க உதவும். இதனால் நீங்கள் எளிதில் பதவி உயர்வை நோக்கி நகரலாம். 

தலைமை பண்பு அனைவருக்கும் இருக்காது, தலைமை பண்பு இருக்கும் அனைவருக்கும் தலைமை பதவி கிடைத்து விடாது என கூறுவர். பிறக்கும் போதே யாரும் தலைவர்களாக பிறப்பதில்லை. அனைவரும் அந்த திறனை மெல்ல மெல்ல கற்றுக்கொண்டுதான் தலைவர்களாகின்றனர். எனவே, இந்த பண்பை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், கண்டிப்பாக பதவி உயர்வு கிட்டும். 

நீங்கள், வேலையில் செய்த சாதனைகள், உங்கள் வேலைக்காக கிடைத்த பாராட்டுகள் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்திக்கொள்ளுங்கள். இது, உங்கள் உயர் அதிகாரியை வேலைக்கான மதிப்பீடு செய்யும் நேரத்தில் (appraisal period) உதவலாம். இப்படி அனைத்தும் செய்தும் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் அது உங்கள் தவறு இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link