மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி? பெண்களே ஜாக்பாட்..!
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வார விழா கூட்டுறவுத்துறை சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன்மூலம் கூட்டுறவுத்துறை திட்டங்கள், மக்கள் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பெரியக்கருப்பன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழுதுகள், சிறகுகுகள் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முக்கியமான செய்தி ஒன்றையும் தெரிவித்தார். அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai) வழங்கப்படும் தொகையை மாதந்தோறும் ஆயிரம் ரூபாயில் குறிப்பிட்ட தொகையை கூட்டுறவுத்துறையின் தமிழ் மகள் சேமிப்பு திட்டம் மூலம் சேமித்து வட்டி பெறலாம் என்பதை தெரிவித்தார்.
இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 8 விழுக்காடு வட்டி வழங்கும் இந்த திட்டத்தில் சுமார் 32 ஆயிரம் பெண்கள் ரெக்கரிங் டெபாசிட்டாக செலுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறும் பெண்கள், இந்த திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு செல்ல வேண்டும்.
அங்கு கூட்டுறவு வங்கி கணக்கு ஒன்றை உங்கள் பெயரில் தொடங்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அத்துடன் மகளிர் உரிமைத் தொகையை தமிழ் மகள் திட்டத்தில் எப்படி சேமிப்பது என்பது குறித்த விவரங்களை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் வழிகாட்டுவார்கள்.
அதன்படி, பெண்கள் ஆயிரம் ரூபாய் தொகையையும் சேமிக்கலாம். அல்லது தங்களால் முடிந்த 100 ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமோ அந்த தொகையை சேமிப்பது குறித்து தெரிவிக்கலாம். ரெக்கரிங் டெபாசிட்டில் வரவு வைக்கப்படும் தொகைக்கு ஆண்டு தோறும் வட்டி கிடைக்கும். இதன்மூலம் அரசே வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கு அரசிடம் இருந்தே வட்டியும் பெற்றுக் கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் உள்ளனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதிய விண்ணப்பங்களில் தகுதி வாய்ந்த நபர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட இருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களும் கூட்டுறவுத்துறையின் தமிழ் மகள் திட்டத்தில் சேமிக்கலாம்.