’நான் நிறைய தோல்விகளை பார்த்தவன்’ சஞ்சு சாம்சனின் உருக்கமான வார்த்தைகள்
வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடித்து அமர்களப்படுத்தினார். இந்த சதம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளையும் அவர் படைத்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் டி20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது இரண்டாவது கிரிக்கெட் பிளேயர். இந்திய அணிக்காக டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனைகள் எல்லாம் சஞ்சு சாம்சன் வசம் வந்தது. மேலும், ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் சஞ்சு சாம்சன் வென்றார். அப்போது உருக்கமாக பேசிய சஞ்சு சாமசன், இப்படியொரு ஆட்டத்தை நான் ஆட வேண்டும் என டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த எல்லோரும் விரும்பினார்கள். என்னால் இப்படி ஆட முடியும் என நம்பிக்கை வைத்தார்கள். இப்போது நான் இப்படி ஆடியதால் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சி. என்னை நிறைய பாராட்டினார்கள். நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன். அழுத்தங்களுக்கு மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என நிறைய கற்று இருக்கிறேன். அவையெல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எத்தனை தோல்விகள் வந்தாலும் என் மீது நான் வைக்கும் தன்னம்பிக்கை குறையவே இல்லை. என்னால் முடியும், ஒருநாள் இந்தியாவுக்காக ஆடுவேன் என எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
தவறாமல் கிரிக்கெட் பயிற்சிகளை செய்து கொண்டே இருந்தேன். என்னுடைய பயிற்சிகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனை இன்று செய்து காட்டியது என மகிழ்ச்சி. இந்திய அணியில் இருக்கும் பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருக்கின்றனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக்அவுட்டாகி வெளியேறினேன். அந்த தொடருக்குப் பிறகு கேரளா சென்று மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரில் வாய்ப்பு கொடுத்தனர்.
அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை இன்று காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்கள் முகத்தில் இப்போது சிரிப்பை கொடுத்திருக்கிறேன். எனக்கு அவர்கள் இருவரும் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது. இனி தொடர்ந்து இப்படியே ஆட முயற்சி செய்வேன். இந்திய அணிக்காக இப்படியொரு ஆட்டத்தை விளையாட நான் நீண்ட நாட்கள் பயிற்சி செய்து வருகிறேன். ஒட்டுமொத்தமாக என்னுடைய திறமை இன்று வெளிப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி என சஞ்சு சாம்சன் உருக்கமாக பேசினார்.