உங்க மொபைல் நம்பர் மாறிடுச்சா .. மறக்காம ‘இதை’ செய்திடுங்க.. இல்லாட்டி சிக்கல் தான்..!!
உங்கள் மொபைல் எண் மாற்றப்பட்டிருந்தால், தற்போதைய மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பது அவசியம். உங்கள் மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், புதிய எண்ணை எப்படி அப்டேட் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தற்போது UIDAI ஆன்லைனில் மொபைல் நம்பரை புதுப்பிக்கும் வசதியை நிறுத்தி உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே மாற்ற முடியும். ஆஃப்லைன் மூலம் இணைக்க உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறிந்து, ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளம் மூலம் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
ஆதார் புதுப்பிப்பு அல்லது திருத்தப் படிவத்தை எடுத்து உங்களது மாற்றப்பட்ட மொபைல் எண் உட்பட அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பி, உங்கள் படிவத்தை ஆதார் நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும்.
உங்கள் விழித்திரை ஸ்கேன் மற்றும் கைரேகைகள் உட்பட உங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்குவதன் மூலம் உங்கள் விவரங்களை சரிபார்க்கவும்
மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கான ஆஃப்லைன் சேவைக்கு நீங்கள் 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
படிவத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தியதும், உங்களின் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) இருக்கும் ஒப்புகை சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பம் கொடுத்த 90 நாட்களுக்குள், உங்களுடைய ஆதாரில் மொபைல் எண் புதுப்பிக்கப்படும். இதனை நீங்கள் UIDAI இணையதளத்திற்கு சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று "Check Aadhaar Status" என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்கு வழங்கப்பட்ட URN நம்பரை என்டர் செய்யவும். அதன் பிறகு கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "Submit" செய்தால் உங்கள் மொபைல் நம்பர், ஆதார் உடன் இணைக்கப்பட்ட விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.