இளையராஜாவுக்கு அழகிய புகைப்படம் பரிசு... தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து!
இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு இன்று அவரது 81ஆவது பிறந்தநாள் ஆகும்.
இருப்பினும், சமீபத்தில் அவரின் மகள் பவதாரணி உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என இளையராஜா முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது.
எனினும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். சிலர் நேரிலும் சென்று அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கும் இசைஞானி இளையராஜா 81ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்தனர்.
அப்போது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் அழகிய புகைப்படம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்து மரியாதை செலுத்தினர். இளையராஜா முகம் மலர அவர்கள் அளித்த பரிசை ஏற்றுக்கொண்டார்.
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் வித்தியாசமான வகையில் இளையராஜாவுக்கும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் மணிரத்னத்திற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் அவரது X பதிவில்,"இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க" என பதிவிட்டுள்ளார்.