IND vs AUS: அஸ்வினுக்கு மாற்றாக இந்திய அணியில் இணைந்த இளம் வீரர்!
இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவதற்குள் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் அஷ்வினுக்கு பதிலாக மும்பையை சேர்ந்த இளம் வீரர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ள தனுஷ் கோட்யான், பாக்சிங் டே டெஸ்டில் விளையாடுவது தொடர்பான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
வலது கை பேட்டர் மற்றும் ஆஃப் ஸ்பின்னரான கோட்டியன், உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட அஸ்வினை போலவே விளையாடும் ஒரு வீரராக உள்ளார் தனுஷ் கோட்யான்.
இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில், 25.70 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கில் 41.21 சராசரியில் 2523 ரன்கள் குவித்துள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ள தனுஷ் கோட்யான் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.