IND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்?
வங்கதேச அணி இந்தியாவுக்கு (IND vs BAN) தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 3 டி20 போட்டிகளையும் அந்த அணி விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் செப். 19ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வரும் செப். 27ஆம் தேதியும் தொடங்க உள்ளன. அக். 6, 9, 12 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்திய அணி (Team India) அதன் நீண்ட சீசனை விளையாட உள்ளது. 10 டெஸ்ட் போட்டிகளில் அடுத்த 3 மாதங்களில் விளையாட இருப்பதால் பலமான அணியை கட்டமைக்க இந்த வங்கதேச தொடரை ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலையான ஒரு வீரரும், வேகப்பந்துவீச்சு பிரிவையும் இந்தியா சீராக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் இருந்தாலும் ஒரு பேக் அப் பாஸ்ட் பௌலர் மற்றும் பாஸ்ட் பௌலிங் ஆல்-ரவுண்டருக்கான தேவை அதிகமாகி உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன் (Team India Playing XI Selection) குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும், சர்ஃபராஸ் கான் பேக்அப்பாக இருப்பார். அதேபோல், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடுவார், துருவ் ஜூரேல் பேக்அப்பாக இருப்பார். பும்ரா, சிராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்.
எனவே, பிளேயிங் லெவனில் பந்துவீச்சில் மட்டும் ஒரே இரு இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஆகாஷ் தீப் (Akash Deep), யாஷ் தயாள் (Yash Dayal) ஆகிய நான்கு பேர் போட்டியிடுவார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கருப்பு மண் ஆடுகளம் கொடுக்கப்படுமா அல்லது செம்மண் ஆடுகளம் கொடுக்கப்படுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
கருப்பு மண் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும், செம்மண் ஆடுகளம் சுழல் மற்றும் பாஸ்ட் பௌலிங் இரண்டுக்குமே கைக்கொடுக்கும். எனவே ஆடுகளத்தை சார்ந்துதான் பிளேயிங் லெவனும் எடுக்கப்படும். கருப்பு மண் ஆடுகளம் கொடுக்கப்பட்டால் அக்சர் பட்டேல் (Axar Patel), குல்தீப் (Kuldeep Yadav) இடையே போட்டி வரலாம். அதுவே, செம்மண் ஆடுகளம் என்றால் யாஷ் தயாள், ஆகாஷ் தீப் இடையே போட்டி வரலாம்.
இருந்தாலும் 3 வேகப்பந்துவீச்சாளர் - 2 சுழற்பந்துவீச்சாளர் காம்பினேஷனில் செல்வதை விட 2 வேகப்பந்துவீச்சாளர் - 3 சுழற்பந்துவீச்சாளர் காம்பினேஷனில் செல்வதே நலம். எனவே, கம்பீர் - ரோஹித் இணை என்ன செய்யப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.