Budget 2024: இந்திய பட்ஜெட் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 6வது முறையாக இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒரு பெண் நிதியமைச்சர் தொடர்ந்து 6வது முறையாக இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதன்முறை. அதேபோல் தொடர்ந்து 6முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொராஜி தேசாயின் சாதனையையும் சமன் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த ஆர்.கே. சண்முகம் ஷெட்டி இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தியாவில் பட்ஜெட்டை ப்ரீஃப்கேஸில் கொண்டு வரும் மரபு காலம் காலமாக இருந்தது. இதற்கு 2019 ஆம் ஆண்டு முதல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சிவப்பு பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு சிறப்பு கோப்புறையில் பட்ஜெட்டைக் கொண்டு வரப்படுகிறது. அதில் தேசிய சின்னமும் இருக்கும்.
பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா?. பட்ஜெட் என்ற வார்த்தை பிரஞ்சு வார்த்தையான buget என்பதிலிருந்து உருவானது. தோல் பை என்பது இதன் பொருள்.
மத்திய பட்ஜெட் மற்றும் ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்த நாட்டின் பிரதமர்கள்.