பூட்டானின் `ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ` விருது பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!
பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி சிறப்பு செய்தனர். பூட்டான் நாட்டின், மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மக்களுக்கும், நாட்டிற்கும் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி...
டிசம்பர் 17, 2021 அன்று நடைபெற்ற 114வது தேசிய தின விழாவில் பூட்டான் மன்னர், ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ விருது என்ற இந்த விருதை இந்தியப் பிரதமருக்கு வழங்குவதாக அறிவித்தார்.
இந்த விருது நிறுவப்பட்டதிலிருந்து, இந்த மதிப்புமிக்க விருதானது, நான்கு நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, "இந்த விருது எனது தனிப்பட்ட சாதனை அல்ல; இது இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களின் பெருமை" என்று கூறினார்.
இந்தியா-பூடான் உறவுகள் கலாச்சார பரிமாற்றங்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஆன்மீக தொடர்புகளால் குறிக்கப்படுகின்றன. பூடானின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு நாட்கள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பூடான் மக்களின் விருந்தோம்பலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, இந்தியா-பூடான் நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
அரசியல், கலாச்சாரம், சமூகம் அல்லது மனிதாபிமான முயற்சிகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்படுவது வழக்கம். தனித்துவத்துடன் பணியாற்றியவர்களுக்கு பூட்டானிய முடியாட்சி வழங்கும் மிக உயர்ந்த மரியாதை ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது ஆகும்