மலட்டு தன்மையை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி?
இந்த மலட்டுத்தன்மை என்பது இன்று இளைஞர்களில் பலரை பயமுறுத்திக் கொண்டிருக்கும் மிக தீவிரமான பிரச்னையாகும். இதனை சரி செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் ஒருபுறம் திரிகிறார்கள். அம்மாதிரி ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கி பணத்தை இழந்து சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மன அழுத்தத்திற்கு பலரும் ஆளாகி விடுகிறார்கள்.
உண்மையில் மலட்டுத்தன்மை என்பது ஒரு நோயே கிடையாது. நாம் உண்ணும் உணவில் தேவையான அளவு புரதச்சத்து இல்லாததும், ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் நிறைய எடுத்துக் கொள்வதும், புகைப்பழக்கம், மது போன்ற போதைப் பழக்கங்கள்தான் முக்கியக் காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய், மன அழுத்தம், பதற்றம், இதயக் கோளாறுகள், சிறுநீர் பாதை தொற்று மற்றும் உடல் பருமன் ஆகியவை மலட்டுத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் வேறு சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளும் இதற்குக் காரணமாகலாம்.
உடல் சூடு அதிகமானாலும், கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் வேலை பார்க்கிறவர்களுக்கும், மணி கணக்கில் வண்டி ஓட்டுபவர்களுக்கும் இந்த பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம். இவர்கள் உடல் சூடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாசு நிறைந்த காற்றும் நீரும், துரித உணவுகளும், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த காய்கறிகளும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு நம்மை தள்ளி இருப்பதும் ஒரு காரணமே.
இதற்கான தீர்வு: புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, பாதாம் பருப்பு, வால்நட், அக்ரூட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சிறிதளவு எடுத்துக்கொள்வது, வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்வது. நல்லெண்ணெயில் மிளகு 5, சின்ன வெங்காயம் நறுக்கியது 2 , வெள்ளைப் பூண்டு ஒன்று தட்டி சேர்த்து காய்ந்த மிளகாய் ஒன்றையும் காம்பை கிள்ளிவிட்டு போட்டு அந்த எண்ணெயை லேசாக சுடவைத்து பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து குளிக்கலாம்.
உணவில் உப்பு, புளி, காரத்தை குறைவாக சேர்த்துக் கொள்வது, முருங்கைப் பூக்களை பாலில் வேகவைத்து பாலுடன் சேர்த்து சாப்பிடுவது அல்லது செய்யும் பொரியல் வகைகளில் முருங்கை பூக்களையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடல் பலம் பெற உதவும். முருங்கை கீரையை வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்துக் கொள்வதும், முருங்கை இலை மற்றும் பிஞ்சு காய்களை கொண்டு சூப் செய்து பருகுவதும், முருங்கை விதைகளை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பொடியாக்கி பாலில் கலந்து பருகுவதும் நல்ல பலனை தரும்.
உணவே மருந்து என்பதை மறக்க வேண்டாம். சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதும், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியும் ஓய்வும் தருவது அவசியம். இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்ற மலட்டுத்தன்மை என்ற பிரச்னை வராது.