இன்னுயிர் காப்போம் திட்டம் | விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனே நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசு

Fri, 08 Nov 2024-12:55 pm,

தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே “இன்னுயிர் காப்போம் திட்டம்” ஆகும். 

இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” -திட்டம் 18.12.2021 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 

 

தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1.00 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொகை தற்போது ரூ.2.00 லட்சம் வரை என உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள், மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் (https://cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன. 

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர் காக்கும் உன்னதத் திட்டத்தின்கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சம் பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சிகிச்சை அளித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link