அஸ்வின் கோரிக்கையை ஏற்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கடைசி முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் தோனி - கோலி இருவரும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல். தொடருக்கான தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்த தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சோனு நிகம், நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதனால் ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் இசை கச்சேரியை கண்டு ரசிக்கும் வகையில் ரசிகர்கள் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியை காண முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றது. நேரடி டிக்கெட் விற்பனை கிடையாது என்பதால், பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற முயற்சித்தனர்.
பேடிஎம் இன்சைடர் மற்றும் சி.எஸ்.கே. இணையதள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. சி.எஸ்.கே. இணையதள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனிடையே பேடிஎம் செயலியில் சில தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது.
அதில் டிக்கெட் புக் செய்ய முயன்றபோது, முதலில் உள்ளே வருபவர்களுக்கு முன்னிலை என்ற அடிப்படையில் க்யூ முறை பின்பற்றப்பட்டது. அதில் மொத்தமே 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதனால் ரசிகர்கள் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில், 'சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான டிமாண்ட் உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.