IPL Final 2024 : ’எங்கள லேசா நினைச்சிராதீங்க ராசா..’ ஸ்ரேயாஸிடம் சவால் விட்ட பாட் கம்மின்ஸ்!
வழக்கம்போல் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, போட்டி 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த முறை ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை யார் வெல்வார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும், சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். இதனையொட்டி இரு அணி கேப்டன்களுக்கும் சேப்பாக்கம் மைதானம் மற்றும் மெரீனா கடற்கரையில் போட்டோஷூட் நடந்தது.
இதனையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கம்மின்ஸ், கேகேஆர் அணி எங்களை தோற்கடித்துவிட்டதாக நினைக்கலாம்.
ஆனால், இறுதிப்போட்டிக்காக ஆட்டத்தை எங்களது வீரர்கள் பெண்டிங் வைத்திருக்கிறார்கள். ஆரஞ்சு ஆர்மி தங்களது சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டியில் நிச்சயம் காண்பிக்கும் என பாட்கம்மின்ஸ் தெரிவித்தார்.
அதனால், கேகேஆர் பாய்ஸ் எங்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என தெரியும் என நினைக்கிறேன் என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிராக மொத்த அதிரடி ஆட்டத்தையும் சன்ரைசர்ஸ் அணி களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஐபிஎல் 2024ல் அதிக முறை 250 ரன்களுக்கும் மேலாக அடித்த ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா நிலைத்து நின்றுவிட்டால் ஆரஞ்சு ஆர்மி கப் அடிக்கும் என்பது உறுதியாக சொல்லிவிடலாம்.
அதேநேரத்தில் கேகேஆர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற அணி. தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளை ஒன்சைடு மேட்சாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் இரு அணிகளுக்கும் இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி நிச்சயம் அனல் பறக்கும்.