இஷான் கிஷன் ஐபிஎல் விளையாடுவதில் சிக்கல்?
இஷான் கிஷன் கிரிக்கெட் வாழ்க்கை இப்போது கடினமான காலத்தில் இருக்கிறது. அவர் மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவாரா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க இப்போது இஷான் கிஷனின் ஐபிஎல் வாழ்க்கையும் கேள்விக்குறியில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சீரிஸில் இருந்து திடீரென கிளம்பி இந்தியா வந்த இஷான் கிஷன், அணியில் தொடர்ந்து தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளார்.
அதனால் இப்போது கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். அத்துடன் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் களம் காணவும் திட்டமிட்டிருந்தார்.
இதற்கு பிசிசிஐ அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருக்கும் வீரர்கள் தேசிய அணிக்கு விளையாடாத போது தங்கள் மாநில அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தது.
நேரடி எச்சரிக்கையாகவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார். தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களுக்கும் தானே கடிதம் எழுத இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தேசிய அணியில் விளையாடாத வீரர்கள் உடனடியாக ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த எச்சரிக்கையை இஷான் கிஷன் மதிக்கவில்லை.
அவர் விளையாடும் ஜார்க்கண்ட் அணி இப்போது ரஞ்சி டிராபி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக அவர் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ரஞ்சி டிராபி போன்ற உள் நாட்டு போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் விளையாடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு செக் வைக்க திட்டமிட்டுள்ள பிசிசிஐ, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பு வெளியானால் இஷான் கிஷன் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி விளையாட முடியாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.