MSSC: மத்திய அரசின் ஜாக்பாட் திட்டம், சூப்பர் வட்டி... பெண்களே உடனே பாருங்க... நெருங்கும் கடைசி தேதி!
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (MSSC) கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டதாகும். இது மகளிர் மற்றும் சிறுமிகள் பொருளாதார அளவில் சுதந்திரமாக செயல்படுவதை ஊக்குவிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகும்.
இந்த திட்டத்தில் கீழ் கடந்த அக். 10ஆம் தேதி வரை மொத்தம் 43 லட்சத்து 30 ஆயிரத்து 121 பேர் இணைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தற்போது தகவல் அளித்துள்ளது. அந்தளவிற்கு இந்த திட்டத்தில் என்ன பலன் இருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் மகளிர் நேரடியாக கணக்கு திறக்கலாம். சிறுமிகள் தங்கள் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் உதவியில் திறக்கலாம். அதுவும் வரும் 2025இல் மார்ச் 31ஆம் தேதி வரையிலேயே நீங்கள் கணக்கு திறக்க முடியும்.
இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1000 வரை டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஆனால் இதன் டெபாசிட் காலம் 2 ஆண்டுகள்தான்.
இந்த திட்டத்தின்கீழ் உங்களுக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டுக்கும் கூட்டு வட்டி கிடைக்கும். அதுவும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒருவேளை இதன் பயனாளர் உயிரிழந்தால் இதில் இருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். உயிருக்கு ஆபத்தான வகையில் மரணம் அல்லது பெற்றோர், பாதுகாவலரின் மரணம் குறித்த ஆவணங்களை சமர்பித்தும் பாதி தொகையை பெறலாம். இல்லையெனில், கணக்கு தொடங்கிய 6 மாதத்திற்குள் எவ்வித காரணங்களுமின்றி கூட நீங்கள் பாதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், பாதி தொகையை பெற்றுவிட்டால் 2% வட்டி விகிதம் குறைக்கப்படும். மேலும், உங்களின் டெபாசிட்டுக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். கூட்டு வட்டி கிடைக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கில் டெபாசிட் தொகை, வட்டி வருவாய் ஆகியோரை வரவு வைக்கப்படும்.
இந்த கணக்கை திறக்க ஆதார் கார்டு அல்லது பான் கார்டு தேவைப்படும். இந்த கணக்கை நீங்கள் வங்கிகளிலும், தபால் நிலையத்திலும் கூட திறந்துகொள்ளலாம். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும், தகுதிபெற்ற சில தனியார் வங்கிகளிலும் நீங்கள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின்கீழ் கணக்கை தொடங்கலாம்.