கார் வைத்திருந்து கலைஞர் உரிமைத் தொகை வாங்குகிறார்களா? ஆன்லைனில் புகார் அளிக்கலாம்
கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அந்தவகையில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இதில் பயனாளிகளாக இருக்கின்றனர்.
இந்தியாவிலேயே அதிக பெண் பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் பயனாளியாக இருக்க சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தகுதி வாய்ந்த பெண்கள் கலைஞர் உரிமைத் தொகையில் பயனாளிகாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
சிலர் தகுதியிருந்தும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக பயனாளிகளாக சேர முடியாத நிலை உள்ளது. அந்த பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அரசு அந்த விண்ணபங்களை பரிசீலித்து பயனாளிகளாக விரைவில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பயனாளிகளாக இருந்த பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
காரணம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக அவர்கள் இல்லை என்பதால் அரசு இந்த நடவடிக்கை எடுத்தது. மேலும், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகளாக இருந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை கலைஞர் உரிமைத் தொகை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் யாரேனும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
சொந்த பயன்பாடுக்காக கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கக்கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறும் நபர்களாக இருக்கக்கூடாது. வருமானவரி தாக்கல் செய்பவர், வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட நிதி சலுகைகளை பெறுபவராக இருக்கக்கூடாது.
ஒரே வீட்டில் இருவர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளியாக இருக்க முடியாது என்பது உள்ளிட்ட இன்னும் சில நிபந்தனைகளும் விதிமுறைகளும் உள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் யாரேனும் கலைஞர் உரிமைத் தொகை பெற்றால் ஆன்லைனில் https://kmut.tn.gov.in/public_complaints.html என்ற பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் பெயர் மற்றும் மொபைல் எண், முகவரி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதேபோல் நீங்கள் புகார் அளிக்கும் தகுதியற்ற கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளியின் பெயர், ஊர், வட்டம், ரேஷன் கடை, தகுதியின்மை ஆகியவற்றின் காரணங்களையும் உள்ளிட வேண்டும். ஆதாரப்பூர்வத்துக்கு ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் சமர்பிக்கலாம்.
புகார் குறித்த குறுஞ்செய்தி புகார் அனுப்பியவரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் கள விசாரணை செய்வார்கள். அதில் தகுதியின்மை நிரூபிக்கப்பட்டால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீங்கள் புகார் அளிக்கும் நபரின் பெயர் நீக்கப்படும்.