கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : ஜனவரி மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்?
தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் கொடுத்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர்.
ஆனால் புதிய பயனாளிகளை சேர்ப்பதில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், இப்போது பயனாளிகளாக இருக்கும் பெண்களுக்கே மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க தமிழ்நாடு அரசு நிதி சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. புது பயனாளிகளை சேர்த்தால் இந்த செலவுத் தொகை அதிகரிக்கும் என்பதால், தகுதி வாய்ந்த பெண்கள் பலரை சேர்க்க முடியாத சூழலில் தமிழ்நாடு அரசு இருக்கிறது.
அண்மையில் காஞ்சிபுரத்தில் திமுக கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான நிதியை முறையாக கொடுப்பத்தில்லை என குற்றம்சாட்டிய அவர், அதனால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருக்கும் பயனாளிகளுக்கே ஆயிரம் ரூபாய் சரியாக கொடுக்க அரசு மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
அரசு கஜானாவில் பணம் இல்லை என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தகுதிவாய்ந்த பெண்கள் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் எண்ணம் என கூறிய அவர், விரைவில் தகுதிவாய்ந்த எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.
அவரின் இந்த பேச்சு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருக்கும் பயனாளிகளுக்கே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு கஜானாவில் பணம் இல்லை என அமைச்சர் கூறியிருப்பதால் ஜனவரி மாதம் வர வேண்டிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்குமா? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழக்கமாக கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா? என்ற கேள்விகள் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரத்தில் விசாரிக்கும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இப்போது பயனாளிகளாக இருப்பவர்களுக்கு வழக்கமாக பணம் வரும் தேதியில் ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படுமா? என்பதை அரசு இன்னும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
முடிந்தளவுக்கு அந்த பணத்தை கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதால் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் கொடுப்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்களை இறுதி செய்யும் பணியும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும். அதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 2 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த ஆண்டும் அதே தேதியில் டோக்கன் விநியோகம் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் மற்றும் ஜனவரி மாதம் வழங்க வேண்டிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.